புதிய பயணக்கட்டண முறை கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 30ஆம் தேதிவரை ஏறக்குறைய 37,000 பேர் இலவச பயண அட்டைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
பழைய வகை அட்டை சார்ந்த பயணச்சீட்டு முறையின்கீழ், கழிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதையும் எவ்வளவு தொகை மீதமுள்ளது என்பதையும் கட்டணத் திரை காட்டும்.
இந்நிலையில், அக்கட்டண முறையைப் படிப்படியாகக் கைவிட்டு, ஜூன் 1ஆம் தேதி முதல் புதுவகை சிம்ப்ளிகோ முறைக்கு மாறுவதாக ஆணையம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி அறிவித்திருந்தது. அதன்படி, ஜூன் 1 முதல் பெரியவர்கள் அனைவரும் சிம்ப்ளிகோ அட்டையைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆயினும், அதுகுறித்து அதிருப்திக் குரல்கள் எழவே, பின்னர் அம்மாற்றம் கைவிடப்படுவதாக ஜனவரி 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
சிம்ப்ளிகோ அட்டையைப் பயன்படுத்திப் பயணம் செய்தபோது, எவ்வளவு பணம் கழிக்கப்பட்டது, எவ்வளவு தொகை மீதமுள்ளது என்ற விவரங்கள் காட்டப்படாதது பல பயணிகளுக்கு எரிச்சலூட்டியது. மின்னிலக்க முறைப்படியே, அதாவது சிம்ப்ளிகோ செயலி போன்ற வழிகளில்தான் பயணக்கட்டணப் பரிவர்த்தனைகளைக் காண முடியும்.
இந்நிலையில், 2024 ஜனவரி 9 முதல் 22ஆம் தேதிக்குள் தங்களது ஈஸிலிங்க் அட்டைகளை சிம்ப்ளிகோ அட்டைகளாக மாற்றியோர் அல்லது அக்காலகட்டத்தில் சிம்ப்ளிகோ ஈஸிலிங்க் அட்டைகளை வாங்கியோர், அவற்றைக் கொடுத்து இலவசமாக ஈஸிலிங்க் அல்லது நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என ஆணையம் அறிவித்தது.
அதே காலகட்டத்தில் சிம்ப்ளிகோ முறையின்கீழ் இயங்கும் நெட்ஸ் பிரீபெய்டு அட்டைகளை வாங்கியோரும் அந்த அட்டைகளை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அந்த அட்டைகளைப் பெற்றுக்கொள்ள கடந்த மார்ச் 18 முதல் ஜூன் 30 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஏறக்குறைய 296,000 பெரியவர்கள் பயண அட்டைகளை இலவசமாக மாற்றிக்கொள்ளத் தகுதிபெற்றிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சலுகைக் கட்டண அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு ஏப்ரல் 1 தொடங்கி மே 31ஆம் தேதிக்குள் மாற்று அட்டைகள் அஞ்சல்வழி அனுப்பி வைக்கப்பட்டன.
இலவச பயண அட்டை வழங்கும் நடவடிக்கை நிறைவுபெற்ற நிலையில், திரையில் கட்டணம் தெரியும் வகையிலான பழைய முறை பயண அட்டைகளைப் பெற்றுக்கொள்ள இன்னும் வாய்ப்புள்ளது.
சிம்ப்ளிகோ பயணச்சீட்டு அலுவலகங்கள், சலுகைக் கட்டண அட்டை மாற்றும் அலுவலகங்கள், எம்ஆர்டி நிலையங்களிலுள்ள பயணச்சீட்டு சேவை நிலையங்கள், பேருந்துச் சந்திப்பு நிலையங்கள், ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவங்கள், பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களிலுள்ள பயணிகள் சேவை நிலையங்கள், 7-இலெவன் போன்ற கடைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.