சலுகை விலையில் 200,000க்கும் அதிகமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) பயணச்சீட்டுகளும் 180,000க்கும் அதிகமான ஸ்கூட் பயணச்சீட்டுகளும் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு விடப்படும்.
இந்தப் பயணச்சீட்டுகள், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் பயணம் மேற்கொள்ளும் எஸ்ஐஏ விமானங்களுக்கும் இவ்வாண்டு நவம்பர் முதல் அடுத்த ஆண்டு அக்டோபர் வரை பயணம் மேற்கொள்ளும் ஸ்கூட் விமானங்களுக்குமானவை என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திங்கட்கிழமை (அக்டோபர் 13) அறிக்கையில் தெரிவித்தது. ஸ்கூட், எஸ்ஐஏ நிறுவனத்தின் மலிவு விலை விமானச் சேவையாகும்.
இந்தச் சலுகை விலை பயணச்சீட்டுகள் எதிர்வரும் ‘டைம் டு ஃபிளை டிராவல் ஃபேர்’ பயண நிகழ்ச்சியில் வழங்கப்படும். இப்பயணச்சீட்டுகளை இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து வரும் நவம்பர் ஆறாம் தேதி வரை எஸ்ஐஏ, ஸ்கூட் இணையத்தளங்களிலும் திறன்பேசி செயலிகளிலும் அதிகாரபூர்வ பயண நிறுவனங்களிடமிருந்தும் வாங்கலாம்.
சலுகை விலையில் வழங்கப்படும் இந்தப் பயணச்சீட்டுகளை இம்மாதம் 24லிருந்து 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சுற்றுப்பயண நிகழ்ச்சியிலும் வாங்கிக்கொள்ளலாம். அந்நிகழ்ச்சி, சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தின் 401, 402, 403 எண் மண்டபங்களில் நடைபெறும்.