சிங்கப்பூரில் நிகழ்ந்த மிகப் பெரிய சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் குற்றவாளி என தீர்ப்பாகி தண்டனை பெற்ற வாங் ஷுய்மிங் என்பவர் தனி விமானத்தில் பயணம் செய்து மோன்டெனகுரோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தச் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட 10 பேரில் திரு வாங் ஷுய்மிங்கும் ஒருவர்.
வாங்கின் தண்டனைக் காலம் முடிவுற்ற பின் அவர் ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் தற்பொழுது மோன்டெனகுரோவின் எல்லைக் காவல் படையினரால் டிவாட் என்ற விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் ஜனவரி 28ஆம் தேதி தனி விமானத்தில் மாலத்தீவில் இருந்து அங்கு பயணம் செய்ததாக விஜஸ்டி என்ற மோன்டெனகுரோ நாட்டு செய்தித்தாள் தகவல் வெளியிட்டது.
அவர் எப்பொழுது கைது செய்யப்பட்டார் என்று அந்த செய்தித்தாள் கூறவில்லை. ஆனால், விமானத்தில் வந்த பயணிகள் தொடர்பான தகவல்களை இன்டர்போல் எனப்படும் அனைத்துலக் காவல்துறை தரவுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
திரு வாங்குக்கு எதிராக அனைத்துலக கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விஜஸ்டி செய்தித் தகவல் விளக்கமளித்தது.
திரு வாங் சிங்கப்பூரில் தனது தண்டனைக் காலத்தை நிறைவேற்றிவிட்டுச் சென்ற பிறகு அவரது இருப்பிடம் குறித்து இப்பொழுதுதான் தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.