நிறுவனக் கண்காணிப்பு அமைப்புகளின் குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன

$3 பி. பணமோசடி வழக்கு:

நிறுவனக் கண்காணிப்பு அமைப்புகளின் குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன

2 mins read
beafdbfd-c6c2-4141-be9b-63038c4d0cd8
$3 பில்லியன் பணமோசடி வழக்கில் காவல்துறையினர் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் நடந்த ஆகப்பெரிய பணமோசடி வழக்கு, சொத்துகளை மீட்கும் நாட்டின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால், அதே வேளையில் நிறுவனங்களைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள குறைபாடுகளையும் அது வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

சிங்கப்பூர், அனைத்துலகக் குற்றக்கும்பல்களுக்கு எந்த அளவுக்கு ஈர்ப்புடைய இடமாக இருக்கிறது என்பதை 2023ஆம் ஆண்டின் $3 பில்லியன் பணமோசடி வழக்குத் தெளிவாகக் காட்டுகிறது என்று 2026 நிதி நடவடிக்கைச் செயற்குழுவின் அண்மை அறிக்கை குறிப்பிடுகிறது.

சிங்கப்பூர்க் காவல்துறையும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் சிக்கலான, திட்டமிட்ட குற்றக்கும்பல்களைத் திறம்பட முறியடித்ததை அறிக்கை சுட்டிக்காட்டியது.

அசையாச் சொத்துகள், மெய்நிகர் நாணயங்கள் என முன்னெப்போதும் இல்லாத அளவிலான சொத்துகளை அதிகாரிகள் கைப்பற்றிச் சிறப்பாக நிர்வகித்தனர். 2020லிருந்து 2024 வரை சிங்கப்பூரில் கைப்பற்றப்பட்ட மொத்தச் சொத்துகளில் 47 விழுக்காடு இந்த ஒரே வழக்கில் முடக்கப்பட்டது இதன் சிறப்பைக் காட்டுகிறது.

மறுபுறம், வணிக நிறுவனங்கள் உருவாக்கப்படும் விதத்திலும் அவை கண்காணிக்கப்படும் முறையிலும் உள்ள குறிப்பிடத்தக்க பலவீனங்களை இந்த வழக்கு அம்பலப்படுத்தியுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களை மறைக்கப் போலி நிறுவனங்களை உருவாக்கக் குற்றவாளிகள், நிறுவனச் சேவை வழங்குநர்களைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

வங்கியாளர்கள், சொத்து முகவர்கள் போன்ற தொழில்முறை இடைத்தரகர்கள், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்ட சிக்கலான கட்டமைப்புகளை உருவாக்க உதவியதை விசாரணைகள் காட்டின. இது மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்திக் கட்டுப்பாடுகளை மீறக் குற்றவாளிகளுக்கு வழிவகுத்தது.

குறிப்பாக, வணிகங்களின் உண்மையான உரிமையாளர்கள் குறித்த தகவல்கள், அடிப்படை வாடிக்கையாளர் சோதனைகளுக்கு அப்பால் பெரும்பாலும் சரிபார்க்கப்படுவதில்லை. அதனால் அவை எந்த அளவுக்குத் துல்லியமாக உள்ளன என்பது கேள்விக்குறியே என்று செயற்குழு தெரிவித்தது.

இந்தக் கண்காணிப்புக் குறைபாடுகளைச் சமாளிக்க அதிகாரிகள் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எடுத்தனர். சிங்கப்பூர் நாணய ஆணையம் ஒன்பது நிதி நிறுவனங்களுக்கு $27.45 மில்லியன் அபராதம் விதித்தது. அதோடு, 18 தனிநபர்கள்மீது அது நடவடிக்கை எடுத்தது. மேலும் ஆறு குடும்ப அலுவலகங்களுக்கான வரிச் சலுகைகளையும் ஆணையம் மீட்டுக் கொண்டது.

இதில் தொடர்புடைய நிறுவனச் சேவை வழங்குநர்களின் பதிவுகளைக் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் ரத்துச் செய்ததுடன், போலியான உரிமையாளர் தகவல்களைச் சமர்ப்பித்த தனிநபர்கள் மீதும் வழக்குத் தொடுத்தது. இருப்பினும் வெளிப்படைத்தன்மை தொடர்பான விதிமீறல்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குற்றவாளிகளிடத்தில் போதிய அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இன்னும் அமையவில்லை எனச் செயற்குழு குறிப்பிட்டது.

இதுபோன்ற முறைகேடுகள் நிகழ்வதைத் தடுக்கவும் சிங்கப்பூரின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் தேவை இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2023ல், உள்துறை அமைச்சு, நிதி அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைச்சுநிலைச் செயற்குழு அமைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, சட்டங்களில் உள்ள இடைவெளிகளைக் களைவதற்கான திருத்தங்களைச் செய்யவும் அமைப்புகளுக்கிடையிலான தரவுப் பகிர்வை மேம்படுத்தவும் வழிவகுத்துள்ளது. நிதிக் குற்றங்களைக் கையாள்வதில் சிங்கப்பூரின் உறுதிப்பாட்டை இது காட்டுவதாகச் செயற்குழுவின் அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்