மலேசியாவில் வாகன விபத்தில் காயமுற்றதால் வாழ்நாள் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் சிங்கப்பூரருக்கு வழங்கப்பட்ட $4.7 மில்லியன் இழப்பீடு $3.5 மில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளது.
2018ல் நடந்த விபத்தில் சிக்கிய அந்த ஆடவரின் பெயர் திரு லிம் சுன் யோங். விபத்து நிகழ்ந்த காலகட்டத்தில் திரு லிம் அப்போதுதான் புதிய வேலையில் சேர்ந்திருந்தார். விபத்து நேர்ந்ததன் விளைவாக கடுமையான மூளைக் காயங்களுக்கு ஆளானார் அவர். மேலும் விபத்தால் ஏற்பட்ட காயங்களால் வாழும் நாள் முழுவதும் தாதிமைப் பராமரிப்பு தேவைப்படும் நிலை உருவானது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதியதால் நிகழ்ந்த அந்த விபத்து குறித்து லிம் தரப்பில் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது.
திரு. லிம்மின் மனைவி திருமதி ஜேனட் ஃபங், பிப்ரவரி 2018ல் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் நடந்த அந்த சாலை விபத்து தொடர்பில் வாகன ஓட்டுநர்கள் மூவர், மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.
மேற்குறிப்பிட்டவற்றில் எந்த வாகனமும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்படவில்லை. விபத்து நடந்தபோது 38 வயதாக இருந்த திரு. லிம், அதற்குப் பிறகு நிரந்தர அறிவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். இதனால் வாழ்நாள் முழுமைக்கும் அவருக்கு தாதிமை சுகாதாரக் கவனிப்பு தேவைப்படும் என்று தெரியவந்தது.
இந்த வழக்கில் 2024ல், உயர் நீதிமன்றம் ஐந்து பிரதிவாதிகளும் கூட்டாகவும் தனித்தனியாகவும் விபத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கண்டறிந்தது.
மேலும் கனரக வாகனமான டிரெய்லர் லாரியின் ஓட்டுநர் முகமது ஜாஃப்ரி அப்துல் ஹமீத் மற்றும் அவரது முதலாளியான சியாரிகாட் கான்டினென்ட் லாரி டிரான்ஸ்போர்ட் ஆகியோர் திரு. லிம்மின் காயங்களுக்கு, 50%பொறுப்பு என்றும் நீதிபதி கூறினார்.
விபத்தை ஏற்படுத்திய மற்றுமொரு வாகனமான டொயோட்டா ஓட்டுநர் ஜெஃப்ரி யாப் மற்றும் கார் உரிமையாளர் லியூ லாய் சாங் ஆகியோர் 30% பொறுப்பேற்க வேண்டும்; 20% பொறுப்பு பிஎம்டபிள்யூ ஓட்டுநர் லோ வூன் ஹாங்கைச் சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
எதிர்கால வருவாய் இழப்பு கிட்டத்தட்ட $1.6 மில்லியன், வாழ்நாள் தாதிமைப் பராமரிப்பு செலவுகளுக்காக கிட்டத்தட்ட $1.9 மில்லியன் உள்பட உயர் நீதிமன்றம் திரு. லிம்மிற்கு $4.7 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது. எனினும் இது குறித்து பிரதிவாதிகள் தரப்பு மேல்முறையீடு செய்தது.
குறிப்பாக விபத்து நிகழ்ந்தபோது திரு லிம், அந்த வேலைக்கு புதியவர் என்றும், அப்போது அவர் கண்காணிப்பு பருவத்தில் இருந்தார்; லிம்மின் தொடர் வேலைவாய்ப்பு சார்ந்த காலக்கட்டத்தில் இடைவெளி இருந்ததையும் பிரதிவாதிகள் முன்வைத்தனர்.
இது தொடர்பாக பிப்ரவரி 3ல், மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தனது முடிவு தொடர்பில் எழுத்துப்பூர்வக் காரணங்களை வெளியிட்டது.
திரு. லிம் பிப்ரவரி 7, 2018 (புதன்கிழமை) மூப்படைந்த நேயாளிகளுக்கான மன்றத்தில் நிதி நிர்வாகியாகப் பணியைத் தொடங்கினார். அவரது மாதச் சம்பளம் $3,500. பணிக்குச் சேர்ந்த அடுத்த திங்கட்கிழமை விபத்து நடந்தது, அதாவது அவர் புதிய வேலையில் மூன்று நாட்கள் மட்டுமே பணியாற்றினார்,
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்ட உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவு, திரு. லிம்மின் எதிர்கால வருவாய் இழப்புக்காக வழங்கப்பட்ட தொகையில் 30 விழுக்காட்டை குறைப்பதாக அறிவித்தது. அதன்படி $1.6 மில்லியனாக இருந்த அந்த இழப்பீடு $1.1 மில்லியனாகக் குறைத்தது.

