சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே சட்டவிரோத வாகன சேவை வழங்கியதற்காக நான்கு ஓட்டுநர்களை நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகஸ்ட் 7ஆம் தேதி கைது செய்துள்ளது.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அவர்களின் வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக ஆணையத்தின் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.
இக்குற்றங்கள் கடுமையானவையாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அது கூறியது.
செல்லுபடியாகும் பொதுப்போக்குவரத்துச் சேவை வாகன உரிமம் இன்றி, எல்லை தாண்டிய பயணங்கள் உட்பட சட்டவிரோத வாடகை மற்றும் சேவைகளை வழங்கும் குற்றத்துக்கு $3,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தொடர்புடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்படலாம்.
சொந்தப் பாதுகாப்புக்காக, அத்தகைய சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஆணையம் பொதுமக்களுக்கு நினைவூட்டியது.
“சொந்தப் பாதுகாப்பிற்காக, அத்தகைய சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அச்சேவைகள் சட்டவிரோதமானவை என்பதுடன் போதுமான காப்பீட்டுப் பாதுகாப்பு இல்லாமலும் இருக்கலாம். விபத்து ஏற்பட்டால் அது பயணிகளுக்கு பெரிய ஆபத்தாக இருக்கும்,” என்று ஆணையம் கூறியது.
இதேபோன்ற எல்லை தாண்டிய சேவைகளை வழங்கியதற்காக பிப்ரவரி மாதத்தில், அண்மையில் இடம்பெற்ற அமலாக்க நடவடிக்கையின் போது நான்கு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டதாக அது தெரிவித்தது.

