குறுக்குத் தீவு ரயில் பாதையின் மூன்றாவது, இறுதிக் கட்டத்தில் நான்கு நிலத்தடி ரயில் நிலையங்கள் கட்டப்படும்.
அவற்றுக்கான கட்டுமானப் பணி 2030களின் பிற்பகுதியில் நிறைவடைந்ததும், மேற்குப் பகுதியை மேலும் விரைவாகச் சென்றடைய அவை பயணிகளுக்கு உதவும்.
இறுதிக் கட்டத்தில் கட்டப்படும் ரயில் பாதை கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். அது ஜூரோங் பியர், கல் சர்க்கிள் ஆகிய இரண்டு சந்திப்பு நிலையங்கள் வழியாக மற்ற ரயில் பாதைகளுடன் இணைக்கப்படும்.
தற்போது, அந்த நிலையங்கள் ‘சிஆர்20’ முதல் சிஆர்23’ வரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
‘சிஆர்20’ நிலையம் தாமான் ஜூரோங் குடியிருப்பாளர்களுக்குச் சேவை வழங்கும். அதே வேளையில், ‘சிஆர்21’ நிலையம், ஜூரோங் தீவுக்கான நுழைவாயிலாக அமைவதோடு, எதிர்வரும் ஜூரோங் வட்டார ரயில் பாதையுடனும் இணைக்கப்படும்.
‘சிஆர்22’ நிலையம், ஜூரோங் தொழில்பேட்டையினுள் அமைக்கப்படும்.
இறுதி நிலையமான ‘சிஆர்23’ அல்லது கல் சர்க்கிள் நிலையம், கிழக்கு - மேற்கு ரயில் பாதையுடன் இணைக்கப்படும்.
அந்த நிலையங்கள் நாட்டின் மேற்குத் தொழிற்பேட்டைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் ஊழியர்களுக்கும் சேவை வழங்கும் என்று சிங்கப்பூர் ரயில் சோதனை நிலையத்தில் பேசிய போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) கூறினார். அத்துடன், தீவின் எஞ்சிய பகுதிகளுக்கான போக்குவரத்து இணைப்பை அவை கணிசமாக மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
11 சந்திப்பு நிலையங்களுடன் குறுக்குத் தீவு ரயில் பாதை, ரயில் கட்டமைப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு சியாவ் குறிப்பிட்டார். சேவைத் தடை ஏற்படும்போது, அதிகமான பயணிகள் மாற்றுவழிகளைப் பயன்படுத்த முடியும் என்பதால், அது ரயில் கட்டமைப்பின் மீள்திறனை வலுப்படுத்தும் என்றும் அவர் சுட்டினார்.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் இறுதிக் கட்டம், மேற்குப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ரயில் சேவைமூலம் மேலும் நேரடியான, வசதியான பயணத் தெரிவுகளை வழங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் நில ஆணையமும் ஜூலை 31ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

