தடைசெய்யப்பட்ட பொருள், ‘ஸ்டீராய்டு’ ஊக்க மருந்து உள்ளிட்ட வீரியமுள்ள மருந்துப் மூலப்பொருள்கள் நான்கு தயாரிப்புகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அவற்றில் மூன்றை உட்கொண்ட பிறகு பயனீட்டாளர்களுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டன.
‘என்ரூ பிளஸ்+’, ‘எச்கேடி ஹர்பா குரூஸ் டிராடிசி’, ‘பில் ஹுவா லுஒ சின் டான்’, ‘ஸ்பினாச் ஜின்செங் ஹர்ப் ஷுகர்’ ஆகியவையே அந்தப் பொருள்கள்.
அவை சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தளம் கொண்ட விற்பனையாளர்களால் வெவ்வேறு உள்ளூர் மின்வணிகத் தளங்களான ‘ஷாப்பீ’, ‘லஸாடா’, ‘கெரசல்’, ‘கூ10’ ஆகியவற்றில் விற்கப்பட்டன.
‘என்ரூ பிளஸ்+’ ஃபேஸ்புக்கிலும் விளம்பரப்படுத்தப்பட்டது.
அந்தப் பொருள்களை விற்பனைப் பட்டியலிலிருந்து அகற்ற ஆணையம் மின்வணிகத் தளங்களின் நிர்வாகத்தினருடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இந்தப் பொருள்கள் மலேசியாவில் விற்கப்பட்டதால், தனது கண்டுபிடிப்பு குறித்து மலேசிய ஆணையத்துக்கு சுகாதார அறிவியல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

