புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் அமைந்துள்ள சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகளை (community care apartments) வாங்கியிருப்போரில் இதுவரை சுமார் 40 விழுக்காட்டினர் குடிபுகுந்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய வளர்ச்சி அமைச்சு, சுகாதார அமைச்சு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஆகியவை இணைந்து சமூகப் பராமரிப்பு வீடுகளை அமைத்துள்ளன. இவை முதலில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு விடப்பட்டன.
சுமார் நான்கு மாத தாமதத்துக்குப் பிறகு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘ஹார்மனி வில்லேஜ் @ புக்கிட் பாத்தோக்’ (Harmony Village @ Bukit Batok) என்ற இந்த சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீட்டுத் திட்டத்தில் வீடு வாங்கியோர் சாவிகளைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கினர்.
இத்திட்டத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வீடும் சுமார் 32 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஒரு வீடு, பொதுவாக ஈரறை வீவக வீட்டைவிட சிறிதாக இருக்கும்.
உருட்டும் கதவு (sliding door) ஒன்று உறங்கும் அறைக்கும் ஓய்வறைக்கும் நடுவில் இருக்கும். ஓய்வறை, சமையலறையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
பிறரைச் சார்ந்திராமல் மூத்தோர் சுயமாக வாழ்வதற்கு வகைசெய்யும் அம்சங்கள் இந்த சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகளில் இடம்பெற்றுள்ளன. சக்கர நாற்காலிகளில் இருந்தபடி கழிவறைகளைப் பயன்படுத்துவதற்கு உகந்த அம்சங்கள், மூத்தோருக்கு ஆதரவளிக்கும் சுகாதார, சமூகச் சேவைகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
‘ஹார்மனி வில்லேஜ் @ புக்கிட் பாத்தோக்’, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9ல் அமைந்துள்ளது.
இந்த சமூகப் பராமரிப்பு வீடு ஒன்றை 15 ஆண்டு குத்தகைக்கு வாங்கும்போது விலை 40,000 வெள்ளியில் தொடங்கும். 35 ஆண்டு குத்தகைக்கு வாங்கும்போது விலை 65,000 வெள்ளியில் தொடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வீடுகளை மறுவிற்பனைக்கோ வாடகைக்கோ விட முடியாது.