தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவுச்சாலையில் ஓடிய பேருந்தில் தீ: 40 பயணிகள் மீட்பு

1 mins read
69be46b2-5da9-4dd1-bdb5-d08387e661ff
இயந்திரப் பகுதியில் பகுதியில் தீ எரிவதைக் கண்ட ஓட்டுநர், பேருந்தைப் பத்திரமான இடத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டார். - படம்: சமூக ஊடகம்

தீவு விரைவுச்சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்து 40 பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

விரைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) சென்றுகொண்டு இருந்தபோது பேருந்து சேவை எண் 110 என்னும் எஸ்எம்ஆர்டி பேருந்தின் இயந்திரப் பகுதியில் திடீரென தீப்பற்றியது.

துவாசை நோக்கிச் செல்லும் வழியில் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் வெளியேறும் பாதையில் அந்தப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இரவு 10.30 மணியளவில் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

உடனடியாக, பேருந்தை அதன் ஓட்டுநர் பத்திரமான இடத்தில் நிறுத்தியதாகவும் சம்பவம் குறித்து பேருந்து இயக்கக் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தெரிவித்ததாகவும் எஸ்எம்ஆர்டி பேருந்துப் பிரிவின் துணை நிர்வாக இயக்குநர் வின்சென்ட் கெய் கூறினார்.

அப்போது பேருந்தில் இருந்த 40 பயணிகளையும் ஓட்டுநர் பத்திரமாக இறக்கி வேறொரு பேருந்தில் அனுப்பி வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர், பேருந்தின் இயந்திரப் பகுதியில் கிளம்பிய புகை, தானியக்க தீயணைப்புக் கருவி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு, பணிமனைக்கு பேருந்து இழுத்துச் செல்லப்பட்டது.

இயந்திரப் பகுதியில் திடீரென தீப்பற்றியது எப்படி என விசாரிக்கப்பட்டு வருவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

நிறுத்தப்பட்ட பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை மேலெழுந்ததை காணொளிப் படம் ஒன்று காட்டியது.

பேருந்துச் சேவை எண் 110, சாங்கி விமான நிலையத்துக்கும் புவாங்கோக் பேருந்து நிலையத்துக்கும் இடையே சேவையாற்றுகிறது.

குறிப்புச் சொற்கள்