தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளை 40% மூத்தோர் பெற்றுள்ளனர்

2 mins read
7ab6b927-3330-4884-82d1-1f52b2cd0321
எஸ்ஜி60 தபால் அட்டைகள் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரர்களில் 60 அல்லது அதற்கும் அதிக வயதான மூத்தோரில் 450,000க்கும் அதிகமானோர் இம்மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றக்கொண்டுள்ளனர்.

அப்படியென்றால் சிங்கப்பூரின் 1.1 மில்லியன் மூத்தோரில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றுவிட்டனர் என்று வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் புதன்கிழமை (ஜூலை 2) ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நோக்கில் ஒருமுறை வழங்கப்படும் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் ஜூலை ஒன்றாம் தேதி வெளியிடப்பட்டன.

எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளை வழங்குவது, நமது தேசத்தை உருவாக்கியதில் எல்லா சிங்கப்பூரர்களின் பங்கையும் அங்கீகரிக்கும் நடவடிக்கையாகும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

60 அல்லது அதையும் தாண்டியோர் 800 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோல், 21லிருந்து 59 வயதுக்கு உட்பட்டோர் இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து 600 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டுகளைப் பெற்றக்கொள்ளலாம்.

சிடிசி பற்றுச்சீட்டுகளைப் போல் அல்லாமல் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. சிடிசி பற்றுச்சீட்டுகள் வீடுகளுக்கு வழங்கப்படுகின்றன.

சிங்கப்பூரர் ஒவ்வொருவருக்குமான எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள், இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர் வோங் அறிவித்த எஸ்ஜி60 அனுகூலத் திட்டத்தில் அங்கம் வகிக்கிறது.

சுமார் முன்று மில்லியன் பெரியவர்கள் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பெறுவர். அவற்றுக்கு அரசாங்கம் 2.02 பில்லியன் வெள்ளி செலவிடுகிறது.

சிடிசி பற்றுச்சீட்டுகளை ஏற்றுக்கொள்ளும் எல்லா வர்த்தகங்களிலும் எஸ்ஜி60 பற்றச்சீட்டுகளையும் பயன்படுத்தலாம்.

எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி காலாவதியாகும்.

எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளில் பாதியைத் திட்டத்தில் தகுதிபெறும் பேரங்காடிகளிலும் மீதிப் பாதியைத் தகுதிபெறும் உணவங்காடிகள், அக்கம்பக்கத்துக் கடைகளிலும் பயன்படுத்தலாம்.

பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள உதவி தேவைப்படும் மூத்தோர், சமூக நிலையங்கள், எஸ்ஜி மின்னிலக்க மையங்கள் ஆகியவற்றில் உதவி பெறலாம் என்று திருவாட்டி லோ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய 36 நிலையங்களும் மையங்களும் சிங்கப்பூர் முழுவதும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்