சிங்கப்பூர் ஊழியர்களில் ஐவரில் இருவர் தங்கள் வேலையைச் செய்ய ஆக்கத்திறன்மிகு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அவர்களில் பலரும் அந்த வேலையைச் சொந்தமாகச் செய்ததாகச் சொல்லிக் கொள்கின்றனர். ஒருசிலர் தங்கள் நிறுவனத்தால் தடை செய்யப்பட்ட தளங்களையும் பயன்படுத்துகின்றனர்.
முழுநேர அலுவலக வேலை செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களிடம் இணையம்வழி நடத்தப்பட்ட ஆய்வின் இந்தக் கண்டுபிடிப்புகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன. சேல்ஸ்ஃபோர்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் பொறுப்பளித்து, யூகவ் நடத்திய இந்த ஆய்வில் பங்கெடுத்தோர், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள், முக்கியத்துவம், பயன்பாட்டு நெறி, பாதுகாப்பு பற்றி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கருத்துரைத்தனர்.
சிங்கப்பூர் ஊழியர்களில் 40 விழுக்காட்டினர் தங்கள் வேலைக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக ஆய்வு கண்டறிந்தது. செயற்கை நுண்ணறிவுடன் தங்களது உற்பத்தித்திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்று 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் நினைக்கின்றனர். செயற்கை நுண்ணறிவின் ஆற்றல், தங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க உதவும் என்று 49 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.
வேலைக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவோரில் 76 விழுக்காட்டினர், அந்த வேலையைத் தாங்களே செய்ததாகக் காட்டிக்கொள்கின்றனர். பாதிக்கும் அதிகமானோர் (53 விழுக்காட்டினர்) பலமுறை இவ்வாறு செய்திருப்பதை ஆய்வில் ஒப்புக்கொண்டனர். மேலும், இவர்களில் 48 விழுக்காட்டினர், முதலாளிகள் தடை செய்துள்ள செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஆய்வில் பங்கெடுத்தோரில் 37 விழுக்காட்டுக்கும் குறைவானோருக்கே செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டு நெறிகள் தெரிந்திருந்தன. வெறும் பத்து விழுக்காட்டினரால் மட்டுமே பயன்பாட்டு, பாதுகாப்பு நெறிகள் அனைத்தையும் சரியாகத் தேர்ந்தெடுக்க முடிந்தது.
செயற்கை நுண்ணறிவை வேலைக்குப் பயன்படுத்துவது குறித்து தங்கள் நிறுவனத்தில் தெளிவான கொள்கைகள் இல்லை எனக் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
ஆய்வில் பங்கெடுத்தோரில் 63 விழுக்காட்டினர் செயற்கை நுண்ணறிவைப் பாதுகாப்பான முறையில் அல்லது நெறிகளுக்கு உட்பட்டுப் பயன்படுத்த முதலாளிகளால் பயிற்சிக்கு அனுப்பப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
வேலைக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த ஊழியரிடையில் தேவை இருப்பதை ஆய்வு சுட்டிக்காட்டுவதாகவும், நிறுவனங்கள் இந்த விருப்பத்திற்கு ஏற்பச் செயல்படவேண்டும் என்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் ஆசியான் கிளையின் மூத்த துணைத் தலைவரும் தலைமை மேலாளருமான சுஜித் ஆப்ரஹாம் கூறினார்.

