அரசாங்க அதிகாரிகள்போல ஆள்மாறாட்டம் செய்து பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 40 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (அக்டோபர் 3) நீதிமன்றத்தில் அவர்மீது குற்றம் சாட்டப்படும் எனத் தெரிகிறது.
சீனக் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறி சிலர் தம்மிடம் பேசியதாகப் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி புகார் அளித்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சீனக் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சிலர் தன்னைத் தொலைபேசியில் அழைத்ததாக அவர் கூறினார்.
மோசடிக்காரர்கள், எல்லைகடந்த கள்ளப்பண விவகாரங்களில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறியதுடன் பணம் சட்டவிரோதமான வழியில் சம்பாதிக்கப்பட்டதன்று என்பதை நிரூபிக்க, சிங்கப்பூரில் அறிமுகமற்ற ஒருவரிடம் $6,000 ரொக்கத்தை ஒப்படைக்குமாறு கூறினர்.
இதன் தொடர்பில், காவல்துறையின் இணையக் குற்றப்பிரிவு அதிகாரிகள் அக்டோபர் 1ஆம் தேதி, 40 வயது ஆடவரை அடையாளம் கண்டு கைதுசெய்தனர். மோசடிக்காரர்களின் உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்டவரிடம் அவர் பணத்தைப் பெற்றதாக நம்பப்படுகிறது. மேலும், அவர் இதுபோன்ற பிற சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கைதின்போது, லஞ்ச, ஊழல் தடுப்புப் பிரிவு (சிபிஐபி) அதிகாரி போன்ற போலி அடையாள அட்டை, கைப்பேசி, மோசடி தொடர்பான ஆவணங்கள், குற்றச் சம்பவத்தின்போது அவர் அணிந்திருந்த ஆடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குற்றச் செயல்களின் மூலம் கிடைத்த பலன்களைப் பெற மற்றவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் அவர்மீது வழக்கு பதியப்படும்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, $500,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அரசாங்க அதிகாரிகள் ஒருபோதும் ரொக்கம் அல்லது விலையுயர்ந்த பொருள்களைக் கேட்கமாட்டார்கள் என்றும் இணைய வங்கி நுழைவுத் தகவல்களை வெளிப்படுத்தக் கோரமாட்டார்கள் என்றும் பொதுமக்களுக்கு நினைவுறுத்தப்பட்டது. கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் 1799 எனும் 24 மணி நேர ‘ஸ்கேம்ஷீல்ட்’ உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
