வாகன நுழைவு அனுமதி வில்லையின்றிச் சென்ற 4,000 சிங்கப்பூரர்களுக்கு $360,000 அபராதம்

2 mins read
da25de09-e615-458a-b74e-3aa6a4412602
வாகன நுழைவு அனுமதி வில்லையின்றிச் செல்லும் ஓட்டுநர்கள் உடனடியாக அபராதம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக அதிகாரி ஒருவர் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலேசியாவுக்குள் வாகன நுழைவு அனுமதியின்றிச் சென்ற ஏறக்குறைய 4,000 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய அனுமதி இல்லாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறை இந்த ஆண்டு (2025) ஜூலை 1ஆம் தேதி நடப்புக்கு வந்தது.

அதிலிருந்து அக்டோபர் 20க்குள் 3,910 சிங்கப்பூரர்களுக்கு மொத்தம் 1.173 மில்லியன் ரிங்கிட் ($360,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மலேசியச் செய்தி ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) தெரிவித்தன.

ஜோகூரின் சாலைப் போக்குவரத்துத் துறையின் மூத்த அமலாக்க இயக்குநர் முகம்மது கிஃப்லி மா ஹசான் அந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

இதற்கு முன்னர் செப்டம்பர் 28 நிலவரப்படி, 3,148 பேருக்கு அபராதக் கடிதங்கள் அனுப்பப்பட்டதாக மலேசியாவின் பெரித்தா ஹரியான் கூறியது.

அதன்படி கடந்த மூன்று வாரங்களில் 760க்கும் மேற்பட்ட அபராதக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜோகூரின் மூன்று பகுதிகளில் அபராதக் கடிதங்கள் ஓட்டுநர்களிடம் தரப்பட்டன. ஓர் அபராதத்தின் மதிப்பு 300 ரிங்கிட்.

இரண்டாம் பாலத்தில் உள்ள சுல்தான் அபு பக்கார் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் வளாகத்தில் பெரும்பாலானவை, அதாவது 2,064 அபராதக் கடிதங்களும் சுல்தான் இஸ்கந்தர் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் வளாகத்தில் 1,765 அபராதக் கடிதங்களும் கொடுக்கப்பட்டதாக பெர்னாமா ஊடகம் தெரிவித்தது. எஞ்சிய 81, மவுன்ட் ஆஸ்டினுக்கு அருகே உள்ள தாமான் டாயா புறநகர்ப் பகுதியில் தரப்பட்டன.

வாகன நுழைவு அனுமதி வில்லையின்றிச் செல்லும் ஓட்டுநர்கள் உடனடியாக அபராதம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாகத் திரு கிஃப்லி கூறினார்.

முந்தைய சம்பவங்களில், ஓட்டுநர்கள் சிலர் அபராதம் செலுத்துவதைத் தாமதித்தனர் அல்லது தவிர்த்தனர் என்று அவர் சொன்னார்.

“உடனடியாக அபராதத்தைச் செலுத்தவில்லை என்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்ற எச்சரிக்கை நல்ல பலன் தந்துள்ளது. ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைத்து அபராதத்தை முறையாகச் செலுத்திவிடுகின்றனர்,” என்றார் திரு கிஃப்லி.

குறிப்புச் சொற்கள்