தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆட்டங்கண்ட எஸ்ஐஏ விமானத்தில் பயணம் செய்தோரில் 41 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்

1 mins read
7ef011bb-2015-430a-bcb8-04259a2e0f0c
பேங்காக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கிய எஸ்கியூ321 விமானத்திலிருந்து வெளியேறும் பயணிகள். - படம்: டுவிட்டர்

காற்றில் ஏற்பட்ட தீவிர மாற்றத்தால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் இருந்த 211 பயணிகளில் 41 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என எஸ்ஐஏ தெரிவித்துள்ளது.

எஞ்சியவர்களில் 56 பேர் ஆஸ்திரேலியாவையும் 47 பேர் பிரிட்டனையும் 23 பேர் நியூசிலாந்தையும் 16 பேர் மலேசியாவையும் சேர்ந்தவர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த நால்வரும் இந்தியாவைச் சேர்ந்த மூவரும் விமானத்தில் இருந்தனர்.

இச்சம்பவத்தில் 71 பேர் பேங்காக்கில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதை மூத்த மருத்துவமனை ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.

காயமுற்றவர்களில் அறுவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. 39 பேருக்கு மிதமான காயங்களும் 26 பேர் லேசான காயங்களும் ஏற்பட்டன. சிலருக்கு செவ்வாய்க்கிழமை இரவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சை சேர்ந்த போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு, எஸ்கியூ321 சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தது.

“விசாரணைப் பிரிவு, தாய்லாந்தில் உள்ள அதன் சகாக்களுடன் தொடர்பில் உள்ளது. பேங்காக்கிற்கு விசாரணை அதிகாரிகளை அது அனுப்பும்,” என்று அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.

எஸ்கியூ321 பயணிகளுக்கான உதவியை ஒருங்கிணைக்க எஸ்ஐஏவுடனும் சம்பந்தப்பட்ட சிங்கப்பூர், தாய்லாந்து அதிகாரிகளுடனும் தான் தொடர்பில் இருந்து வருவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில், இறந்தவரின் குடும்பத்தாருக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங், பயணிகளுக்கும் விமானப் பணியாளர்களுக்கு உதவுவதில் தன்னால் ஆன அனைத்தையும் செய்ய தாய்லாந்து அதிகாரிகளுடன் சிங்கப்பூர் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்