கல்வி அமைச்சின் வருடாந்தர நியமனம், சுழற்சிமுறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அடுத்த கல்வியாண்டில் 41 பள்ளிகளுக்குப் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுவர் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான செய்தி அறிக்கையைக் கல்வி அமைச்சு புதன்கிழமை (அக்டோபர் 8) வெளியிட்டது.
அந்த 41 பேரில் 25 பேர் முதன்முறையாகப் பள்ளி முதல்வர்களாகப் பொறுப்பேற்கவிருப்பதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.
அந்த 41 பள்ளிகளில் இரண்டு தொடக்கக் கல்லூரிகள், 20 உயர்நிலைப் பள்ளிகள், 19 தொடக்கப் பள்ளிகள் அடங்கும்.
“சுழற்சிமுறையில் முதல்வர்களை நியமிக்கும் இவ்வகைச் செயல்முறைகள், பள்ளிகள் புதிய அணுகுமுறை வாயிலாகப் பயனடைய வழிவகுக்கிறது. மேலும், அனுபவம் வாய்ந்த முதல்வர்கள், பள்ளிகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும் உதவுகிறது,” என்று கல்வி அமைச்சு கூறியது.
மேலும், இதன்வழி பள்ளி முதல்வர்கள் தங்கள் அனுபவங்களை விரிவுப்படுத்தவும் தாங்கள் பொறுப்பேற்று வழிநடத்தவுள்ள பள்ளிகளின் பணிகளை வலுப்படுத்தவும் வாய்ப்பு பெறுவர் என்றும் அமைச்சு தெரிவித்தது.
‘‘உயரிய பொறுப்புகளுடன் கல்வித் துறையில் தலைவர்களாக நியமிக்கப்பட்ட 25 முதல்வர்களுக்கும் அவர்கள் வாழ்க்கைத்தொழிலில் இது முக்கிய மைல்கல்,” என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
இதற்கிடையே, சுழற்சிமுறையில் மற்ற பள்ளிகளுக்கு முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஏனைய 16 பேருக்குமான இந்த வாய்ப்பு, ‘‘பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களைத் தொடர்ந்து வழிநடத்த கல்வி அமைச்சு அவர்கள்மீதும், அவர்களின் திறன்கள்மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் செயல்,” எனவும் அமைச்சு குறிப்பிட்டது. அவ்வகையில், சங்காட் தொடக்கப்பள்ளியின் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் திருவாட்டி ரத்தினகுமாரி ராமசந்திரா, 54.
தொடர்புடைய செய்திகள்
கல்வித்துறையில் ஏறத்தாழ 25 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த திருவாட்டி ரத்தினகுமாரி, தமது நியமனம் குறித்து தமிழ் முரசிடம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
‘‘மாறிவரும் உலகில் செழித்தோங்க வகைசெய்யும் பண்புகளைப் பெறவும், இடர்களைத் துணிவுடன் எதிர்கொள்ளவும், பிழைகளைப் பாடம் கற்கும் வாய்ப்பாகப் பார்க்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும் மாணவர்களை ஆயத்தப்படுத்துவதே தமது விருப்பம்,’’ என்று தெரிவித்தார் அவர்.
மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பள்ளிக் கலாசாரத்தை உருவாக்க ஒவ்வொரு குழந்தையும் முக்கியம் எனும் நம்பிக்கையுடன் தொடங்கவேண்டும் என்ற திருவாட்டி ரத்தினகுமாரி, ‘‘இந்த மனப்பாங்கு, மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதையும் அவர்கள் வளர்ச்சியடையவும், வெற்றிபெறவும் வேண்டும் என்பதையும் நினைவுறுத்தும்,’’ என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய பள்ளி முதல்வர்களுக்கான நியமன நிகழ்ச்சி டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறும். அந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொள்வார்.