சிங்கப்பூரில் நடக்கும் மோசடிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று குறைந்துள்ளது.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடிகளில் இழந்த தொகை $410.6 மில்லியனை எட்டியது.
அதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு $500.2 மில்லியன் மதிப்புள்ள தொகை இழக்கப்பட்டது. அந்த 2025 ஆம் ஆண்டு முழுவதும் $913.1 மில்லியன் தொகையை பாதிக்கப்பட்டோர் மொத்தமாக இழந்தனர்.
ஆண்டு மத்திக்கான மோசடி குறித்த தகவல்களை புதன்கிழமை (ஆகஸ்ட் 26) வெளியிட்ட காவல்துறை, காப்புறுதி, போலி நண்பர், தூண்டுக் களவு போன்ற சில மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவு இவ்வாண்டில் குறைந்துள்ளது என்று விவரித்தது.
ஆப்பிள், கூகல், மெட்டா நிறுவனங்களுடன் இணைந்து மோசடிக்கு எதிரான நடவடிக்கைகளை சமூக ஊடகத் தளங்களில் செயல்படுத்தும்படி எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனாக இது சாத்தியமானது என்றது காவல்துறை.
அந்தச் செயல்பாடுகளால் மோசடிக்காரர்கள் பாதிக்கப்படக்கூடியயோரை நெருங்கமுடியாமல் போனது.
2026ன் முதற்பாதியில் 47,000 மோசடி சார்ந்த கைப்பேசி & 37,500 வாட்ஸ்ஆப் தொடர்புகளையும், 31,600 போலியான இணையப் பயனாளர்களையும், 52,200 தீங்கிளைக்கும் இணையத் தளங்களையும் காவல்துறை தடுத்துள்ளதாகத் தெரிவித்தது.
இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டபோதும், பத்து மோசடிச் சம்பவங்களில் எட்டில் பாதிக்கப்பட்டோர் அவர்களிடம் உள்ள பணத்தை மோசடிக்கார்களிடம் நேரடியாகவே கொடுத்துவிடும் வகையில் ஏமாற்றப்படுகின்றனர்.
சமூகக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைச் சாதகமாகப் பயன்படுத்தி ஏமாறுவோரிடம் பணத்தை வேறு வங்கிக் கணக்குகளுக்கு சொந்தமாகவே பரிமாற்றம் செய்யும்படி மோசடிக்காரர்கள் தூண்டுகின்றனர். இதன்வழி மோசடிக்காரர்கள் நேரடியாக பாதிக்கப்படுவோரின் வங்கிக் கணக்கைக் கையாளுவதில்லை.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் முதல் ஆறு மாதங்களில் மோசடிச் சம்பவங்கள் 14 விழுக்காடு குறைந்துள்ளன. 2025ஆம் ஆண்டின் முதற்பாதியில் 19,644 சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் இவ்வாண்டு 16, 821 மோசடிகள் நடந்துள்ளன என்று காவல்துறை தெரிவித்தது.
2019ஆம் ஆண்டுமுதல் இதுவரையில் $4 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை சிங்கப்பூர் மோசடியால் இழந்துள்ளது.
மோசடிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் மக்கள் விழிப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டது. அனைத்து வயதினரையும்விட முதியோர்களே மோசடிகளில் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். சிங்கப்பூரில் நடக்கும் குற்றங்களில் மோசடியே முதலிடம் பெறுகிறது.
பலவகையான முதலீடு, அரசாங்க அதிகாரிபோல ஆள்மாறாட்டம் ஆகிய இருவகை மோசடிகளில் முதியோர்கள் அதிகம் சிக்கிக்கொள்கின்றனர்.


