தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூருக்‌குக்‌ கல்விச் சுற்றுலா வந்த 42 தமிழக மாணவர்கள்

2 mins read
c225c45d-100c-47e7-bf67-ab850d398147
தமிழகத்திலிருந்து 42 மாணவர்களும் கல்வித்துறை அதிகாரிகள் நால்வரும் சிங்கப்பூருக்‌கு ஐந்து நாள் கல்விச் சுற்றுலா வந்திருந்தனர். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 5

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட வெவ்வேறு மன்றப் போட்டிகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற 42 மாணவர்களும் நான்கு கல்வித்துறை அதிகாரிகளும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதிவரை சிங்கப்பூருக்‌குக்‌ கல்விச் சுற்றுலா வந்திருந்தனர்.

தமிழக அரசால் இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அனைத்துலக கல்விச் சுற்றுலாவில், தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் கிட்டத்தட்ட 150 தலைசிறந்த மாணவர்களுக்‌கு சிங்கப்பூர், துபாய், ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளுக்‌கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிட்டியது.

சுற்றுலாவிற்கான அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்‌கப்பட்டது.

இச்சுற்றுலாவிற்குத் தலைமையேற்று சிங்கப்பூருக்‌கு வருகை தந்திருந்த தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களுடன் இணைந்து சிங்கப்பூரைப் பார்வையிட்டார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் வாழும் மக்‌களின் வாழ்க்‌கைமுறைகள், கல்விமுறைகள், கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பற்றி நேரடியாக அனுபவித்து தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் ஆர்.சுவாமிநாதன் கூறினார்.

கரையோரப் பூந்தோட்டம், சிங்கப்பூர்ப் பூமலை, பொங்கோல் வட்டார நூலகம், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், செந்தோசாத் தீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த மாணவர்கள் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 27) இந்திய மரபுடைமை நிலையத்தையும் பார்வையிட்டனர்.

“இக்‌காலத்தில் வாழும் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் இருக்‌கிறார்கள். அதேபோல் சிங்கப்பூர்த் தமிழர்களுக்‌கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அதைப்பற்றி மாணவர்கள் இந்திய மரபுடைமை நிலையத்தில் தெரிந்துகொண்டனர்,” என்றார் இந்திய மரபுடைமை நிலையத் தலைவர் ஆர்.ராஜாராம்.

“இந்தியாவிலிருந்து தமிழர்கள் அந்தக்‌ காலத்தில் சிங்கப்பூருக்‌கு வந்தபோது எப்படி இருந்தார்கள், இப்போது எப்படி முன்னேறியிருக்‌கிறார்கள் என்பதையெல்லாம் இங்கு பார்த்து உணர்வுபூர்வமாகத் தெரிந்துகொண்டேன்,” என்று முதல் முறையாக வெளிநாடு வந்திருந்த பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயிலும் 15 வயது மாணவி செ. பார்கவி கூறினார்.

சிங்கப்பூர் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருப்பதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டிலும் இத்தகைய பராமரிப்பை உறுதிசெய்ய அடுத்தடுத்த தலைமுறையினர் அயராது உழைக்‌க வேண்டும் என்று சொன்னார்.

செந்தோசாத் தீவில் இடம்பெறும் ‘விங்ஸ் அஃப் டைம்ஸ்’ ஒளிபாய்ச்சும் நிகழ்ச்சி தனக்‌கு மிகவும் பிடித்திருந்ததாகக் கூறினார் தருமபுரி மாவட்ட அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பி.ரித்திகா, 12.

குறிப்புச் சொற்கள்