தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$9 மில்லியன் மோசடி; 424 பேரிடம் விசாரணை

1 mins read
63538909-0352-4093-adbb-5479c0a0aaa3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நிதி மோசடி தொடர்பில் காவல்துறை இரண்டு வாரங்களாக வீசிய வலையில் 424 சந்தேக நபர்கள் சிக்கியுள்ளனர்.

அவர்களில் ஆக இளையவரின் வயது 16. பலதரப்பட்ட 1,400 மோசடி சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு வலை வீசியதாக காவல்துறை தெரிவித்தது.

விசாரணையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள 424 பேரில் 277 பேர் ஆண்கள், 147 பேர் பெண்கள்.

ஏறக்குறைய ஒன்பது மில்லியன் வெள்ளியை அவர்கள் ஏமாற்றியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களின் வயது 16 முதல் 78 வரையிலாகும்.

வேலை வாங்கித் தருவது, இணையம் வழி பொருள்களை விற்பதாகக் கூறி ஏமாற்றுவது, இணையத்தள மோசடி, அரசாங்க அதிகாரிபோல நடித்து ஏமாற்றுவது, முதலீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

மே 27ஆம் தேதியிலிருந்து ஜூன் 8ஆம் தேதி வரை வர்த்தக விவகாரப் பிரிவும் ஏழு காவல்துறை நிலையங்களும் கூட்டாக மேற்கொண்ட தொடர் சோதனையில் சந்தேக நபர்கள் வலையில் வீழ்ந்தனர்.

ஏமாற்றுதல், கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றுவது உள்ளிட்ட குற்றச் செயல்களின் தொடர்பிலும் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை நேற்று எச்சரித்தது.

குற்றச்செயல்களிலிருந்து விலகியிருக்க வேண்டுமானால் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த யாராவது அனுமதி கேட்டால் பொதுமக்கள் அதை நிராகரிக்க வேண்டும் என்று காவல்துறை நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்