தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலையிடப் பாதுகாப்புக் குறைபாடு: 435 நிறுவனங்கள் தண்டிப்பு

2 mins read
b8e77f28-d9b1-4b43-a81e-bbb7fa279b4f
ஊழியர்களுக்குத் தகுந்த காலணிகள் வழங்காதது, மோசமான பராமரிப்பு நடைமுறைகள் ஆகியன பாதுகாப்புக் குறைபாடுகளில் அடங்கும். - படம்: மனிதவள அமைச்சு/ஃபேஸ்புக்

வேலையிடப் பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக, அபராதம், வேலை நிறுத்த உத்தரவு போன்ற வகைகளில் மனிதவள அமைச்சு 435 நிறுவனங்களைத் தண்டித்துள்ளது.

இவ்வாண்டு ஜூன் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதிவரை இரண்டு மாதகாலமாக அமைச்சு வேலை இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கிடங்கு, ஒட்டுமொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம், சேவைகள் ஆகிய துறைகளில் 700க்கும் அதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மூன்று வேலை நிறுத்த உத்தரவுகள், மொத்தம் $186,050 மதிப்பிலான 89 அபராதங்கள் உட்பட 1,491 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சு ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தது.

மோசமான பராமரிப்பு நடைமுறைகள், மோசமான நிலையில் உள்ள தரைகள், ஊழியர்கள் பொருத்தமற்ற காலணிகளை அணிந்திருத்தல் உள்ளிட்டவை பொதுவான பாதுகாப்புக் குறைபாடுகளில் அடங்கும்.

“ஒருவர் எந்த இடத்திலும் வழுக்கலாம் அல்லது தடுக்கி விழலாம். அதனால், கடுமையான காயங்கள் ஏற்படலாம்,” என்று அமைச்சு கூறியது.

பாதுகாப்பற்ற வேலையிட நிலவரங்கள் குறித்துப் புகார் செய்ய ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுவதாக அது சொன்னது. பாதுகாப்பு இடர்களையும் குறைபாடுகளையும் கண்டுபிடிக்க ஊழியர்களே தகுந்தவர்கள் என்பதே அதற்குக் காரணம் என்றது அமைச்சு. பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்யுமாறு நிறுவனங்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

2014ஆம் ஆண்டிலிருந்து வழுக்கி, தடுக்கி விழுவதே வேலையிடங்களில் ஏற்படும் காயங்களுக்கு முதன்மைக் காரணமாக உள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டது.

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் குறைபாடுகளைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்