தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025 முற்பாதியில் மோசடிகளுக்கு $456மி. இழப்பு; 20,000 புகார்கள்

2 mins read
b7955615-bb02-40d8-95a4-ba3f954bb3e8
உருமாறிவரும் மோசடிகளில் புதிதாகக் காப்புறுதித் திட்டம் தொடர்பானவை சிங்கப்பூரில் தலைதூக்கியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இவ்வாண்டு முற்பாதியில் மோசடிச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோர் ஏறக்குறைய அரை பில்லியன் வெள்ளியை இழந்துள்ளனர். ஜனவரி முதல் ஜூன் வரை மோசடிகள் குறித்து கிட்டத்தட்ட 20,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டின் முற்பாதியைவிட இவ்வாண்டின் முற்பாதியில் மோசடிச் சம்பவங்களால் ஏற்பட்ட இழப்பு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து ஜூன் வரை மோசடிகளில் $522.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு அது $456.4 மில்லியனுக்குக் குறைந்துள்ளது.

மோசடிப் புள்ளிவிவரங்களை வெளியிட்ட காவல்துறை, குறைந்தது $100,000 இழப்பு ஏற்படும் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைச் சுட்டியது.

2025 ஜனவரி முதல் ஜூன் வரை கிட்டத்தட்ட 1,000 பேர் $100,000க்கும் அதிகமான தொகையை மோசடிக்காரர்களிடம் பறிகொடுத்தனர். கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் அந்த அளவு தொகையை இழந்தோர் எண்ணிக்கை 700.

பத்தில் ஏழு பேர் $5,000க்கும் குறைவான தொகையை மோசடியில் இழந்தனர்.

மோசடிகள் தொடர்பான ஏறக்குறைய 79 சம்பவங்களில் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோரின் கணக்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டோரே தங்கள் பணத்தை அனுப்பும் அளவுக்கு மோசடிக்காரர்கள் ஏமாற்றினர்.

மோசடி இழப்புகளில் மின்னிலக்க நாணய இழப்புகள் குறிப்பிடத்தக்க விழுக்காட்டில் வந்துள்ளதை அதிகாரிகள் சுட்டினர். மின்னிலக்க நாணயத்தில் இவ்வாண்டின் முற்பாதியில் $81 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஏமாற்றப்பட்டது.

மோசடிச் சம்பவங்கள் தொடர்ந்து உருமாறிவரும் சூழலில் காப்புறுதித் திட்டங்கள் தொடர்பான மோசடிகளும் இவ்வாண்டு தலைதூக்கியிருப்பதைக் காவல்துறை மேற்கோள் காட்டியது.

இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஜூன் வரை மொத்தம் 791 காப்புறுதித் திட்டங்கள் தொடர்பான மோசடிச் சம்பவங்கள் குறித்து புகார்கள் வந்தன. அதில் பாதிக்கப்பட்டோர் $21 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பறிகொடுத்தனர்.

பெரும்பாலோர் இணைய மோசடிக்கே அதிகம் பலியானதாகப் புள்ளிவிவரங்கள் சுட்டின. அது தொடர்பில் 3,779 புகார்கள் பதிவுசெய்யப்பட்டன. இணைய மோசடிகளில் ஏமாற்றப்பட்ட தொகை கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க 134 விழுக்காடு அதிகரித்தது.

கடந்த ஆண்டின் முற்பாதியில் இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் $13 மில்லியனை இழந்தனர். இந்த ஆண்டின் முற்பாதியில் அது $30.4 மில்லியனாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்