$47,000 ரோலெக்ஸ் கடிகாரத் திருட்டு; இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

2 mins read
c2502d36-7981-4321-8752-68ab41e04e00
கடிகாரத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையில் பெரிய பங்கை நைஜல் டானுக்குத் (படம்) தருவதாக மாற்றான் தந்தை உறுதி கூறியிருந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அச்சத்தால் மூன்று முறை திருடுவதைக் கைவிட்ட இளையர் ஒருவர் இறுதியில் மாற்றான் தந்தையின் வற்புறுத்தலால் கடிகாரத்தைக் களவாடிக் காவல்துறையிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.

$47,000 பெறுமான கடிகாரத்தைக் களவாடும்படி இளையரின் மாற்றான் தந்தையார் அவருக்கு உத்தரவிட்டிருந்தார்.

சில முறை தயங்கிய நைஜல் டான், 19, இறுதியில் நண்பர் ஒருவரின் உதவியோடு கடிகாரத்தைத் திருடினார்.

கடிகாரத்தை விற்பதில் கிடைக்கும் தொகையில் பெரும்பங்கை நைஜலுக்குத் தருவதாக மாற்றான் தந்தை உத்தரவாதம் தந்திருந்தார்.

ஏமாற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்ட நைஜல், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அவரின் முன்னாள் மாற்றான் தந்தையார் கியோ‌ஷிரோகேடன் டான் லீ யூ, 37, இன்னும் தேடப்பட்டு வருகிறார்.

நைஜலுக்கு உதவிய அவரின் நண்பர் லூசியன் டான் கியெட் ஹோங்கும், 20, கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டதா என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

நைஜல் மூன்று வயதாக இருந்தபோது அவரின் தாயாரை டான் திருமணம் செய்துகொண்டார். 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் 2022ஆம் ஆண்டிலிருந்து டானுடன் நைஜல் வசித்து வருகிறார். பெரியவர் வேலை செய்யவில்லை. நைஜல் மதுபானக் கடையில் வேலை செய்கிறார்.  

2024ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, பணம் தேவைப்படுவதாகச் சொன்ன டான், யாரையாவது ஏமாற்றிக் கடிகாரத்தைப் பெற்று அதனை விற்கும்படி நைஜலிடம் கூறியிருந்தார்.

நைஜல், அவரின் நண்பர் லூசியனையும் சதித்திட்டத்தில் சேர்த்துக்கொண்டார்.

மின்வர்த்தகத் தளமான கேரொசல் மூலம் இரு முறை இருவரை ஏமாற்ற முயன்ற அவர்கள் பின்னர் சதித்திட்டத்தைக் கைவிட்டனர்.

மூன்றாம் முறை ரோலெக்ஸ் உரிமையாளர் ஒருவரைத் திட்டமிட்டு ஏமாற்றினர். அவரிடமிருந்த கடிகாரத்தைப் பறித்துக்கொண்டு இருவரும் வேறு வேறு திசைகளில் தப்பித்து ஓடினர். துரத்திப்பிடிக்க முயன்ற கடிகாரத்தின் உரிமையாளர், பின்னர் காவல்துறையைத் தொடர்புகொண்டார்.

லூசியன் கடிகாரத்தை டானிடம் கொடுத்தார். நைஜலின் காதலியுடைய வங்கிக் கணக்கிற்கு டான் பணத்தை அனுப்பிவைத்தார். லூசியன் அதிலிருந்து $1,750ஐ எடுத்துக்கொண்டார். இருவரும் பின்னர் கைதாயினர்.

குறிப்புச் சொற்கள்