நீண்டநேரம் ஆர்டருக்காக காத்திருந்ததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடை மேலாளருடன் வாக்குவாதம் செய்த வாடிக்கையாளரிடம் மெக்டோனல்ட்ஸ் சிங்கப்பூர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஸ்டோம்பர் (Stomper) டே என்பவர் ஜூன் 7ஆம் தேதி ஹவ்காங் 1 கடைத்தொகுதியில் உள்ள மெக்டோனல்ட்ஸ் கடைக்குச் சென்று இரவு 10.28 மணிக்கு உணவை வீட்டிற்கு வாங்கிச் செல்ல ஆர்டர் கொடுத்ததாகவும் அது 48 நிமிடங்களுக்குப் பிறகுதான் உணவு தயாராக இருந்ததாகவும் கூறினார்.
இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது ஒரு ஊழியர் ‘முரட்டுத்தனமாக’ பதிலளித்ததாக டே குற்றம் சாட்டினார்.
டே இந்த சம்பவம் குறித்து மெக்டோனல்ட்சுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அதை அவர் ஸ்டோம்பிடம் பகிர்ந்துகொண்டார்.
“கடை பரபரப்பாக இருந்ததால் நான் பொறுமையாக காத்திருந்தேன்.”
“இரவு 10.55 மணியளவில், என்னுடன் ஒரே நேரத்தில் ஆர்டர் செய்திருந்த மற்ற அனைவரும் ஏற்கெனவே உணவைப் பெற்று சென்றுவிட்டதை நான் உணர்ந்தேன்.”
“நான் கவுண்டரில் இருந்த ஒரு ஆன்ட்டியிடம் இது பற்றிக் கேட்டேன். என் ஆர்டர் இன்னும் தயாராகி வருவதால் காத்திருக்குமாறு அவர் கூறினார். 10 நிமிடங்களுக்குப் பிறகு, நான் மீண்டும் அவரிடம் கேட்டேன். காத்திருக்கச் சொன்னார்.”
“கடைசியாக, இரவு 11.16 மணியளவில், என் ஆர்டர் தயாராக இருந்தது.”
தொடர்புடைய செய்திகள்
“கடமை மேலாளரிடம் பேச அனுமதி கேட்டேன். அந்த ஆன்ட்டி அவரிடம் சொன்னார், ஆனால் அவர் தலையைத் திருப்பி, என்னைப் புறக்கணித்துவிட்டு தன் வேலைகளைத் தொடர்ந்தார். அதன் பிறகு, அந்த ஆன்ட்டி மீண்டும் அவரை அழைத்தார், அவர் வேண்டாவெறுப்பாக கவுண்டருக்கு வந்தார்.”
“என் ஆர்டரை சமையலறை மறந்துவிட்டதை நான் உணர்ந்தேன், அதனால் நான் ஏன் விரைவு உணவு ஆர்டருக்காக 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதை விளக்குமாறு கேட்டேன்.”
“அவர் உடனடியாக முரட்டுத்தனமான அணுகுமுறையுடன், கண்களை அகலத் திறந்து ஒரு ரவுடிபோல பேச ஆரம்பித்தார். அவர் என்னிடம் சவால் விடுத்து, கடை பரபரப்பாக இருப்பதை ஏன் பார்க்க முடியவில்லை, சமையலறை ஊழியர்கள் நடனம் ஆடுகிறார்களா? என்று கேட்டார்.”
“என் ஆர்டரை திரும்பப் பெற விரும்புகிறீர்களா என்றும் கேட்டார். நான் இவ்வளவு நேரம் காத்திருந்ததால் அதைச் செய்யப் போவதில்லை என்றும், என் குடும்பத்தினர் எங்கள் பிறந்தநாள் உணவிற்காக காத்திருக்கிறார்கள் என்றும் கூறினேன்.”
“ஏன் இவ்வளவு முரட்டுத்தனமாக இருக்கிறார் என்று கேட்டேன். மற்ற வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் முன்னிலையில் நான் அவருக்கு ‘மரியாதை’ கொடுக்கவில்லை என்று கூறினார். என் உணவைத் தயாரிக்க இவ்வளவு நேரம் ஏன் ஆனது என்று தெரிந்துகொள்ள மட்டுமே நான் விரும்பியதால் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.”
“புகார்செய்ய விரும்பியதால் அவருடைய பெயரைக் கேட்டேன். அவர் தனது பெயர் அட்டையை மேசைமீது எறிந்தார். நான் அதைப் படம் எடுக்க விரும்பியபோது, அவர் அதைப் பயத்துடன் பிடுங்கிக்கொண்டு, ‘ஷிஃப்ட் மேனேஜர் ஆன் டியூட்டி’ படத்தை எடுக்கச் சொன்னார் (என்ன வித்தியாசம் என்று எனக்குப் புரியவில்லை).”
“இவை அனைத்தையும் உங்கள் சிசிடிவி கேமராக்களில் பார்க்கலாம். மெக்டோனல்ட்ஸ் தங்கள் மேலாளர்களுக்கு இப்படித்தான் பயிற்சி அளிக்கிறதா? இதுதான் உங்கள் பயிற்சிபெற்ற ஊழியர்களின் தரமா?”
“இது நிச்சயமாக மறந்துபோன ஒரு ஆர்டர். மேலும், மேலாளர் சற்றும் மன்னிப்புக் கேட்கவில்லை.”
தன் கருத்துகளில் தன்னை ‘மிகவும் ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்’ என்று விவரித்த டே, மேலாளரின் அணுகுமுறை ‘பயமுறுத்துவதாக’ இருந்ததாகவும் விவரித்தார்.
ஸ்டோம்ப் கேள்விக்குப் பதிலளித்த மெக்டோனல்ட்ஸ் செய்தித் தொடர்பாளர்: “நடந்ததை அறிந்து வருந்துகிறோம், விஷயங்களை சரிசெய்ய அவர்களைத் தொடர்புகொண்டோம்.”
“நிலையான சேவை எங்களுக்கு முக்கியம், இது மீண்டும் நிகழாமல் தடுக்க எங்கள் குழுவுடன் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.”
மெக்டோனல்ட்ஸ் தன்னைத் தொடர்புகொண்டு ஆர்டருக்கான பணத்தைத் திரும்பப் பெற்றதை ஜூலை 11ஆம் தேதி டே ஸ்டோம்பிடம் உறுதிப்படுத்தினார்.
“சமூக ஊடக சக்தி மிகவும் அற்புதமானது,” என்றார் அவர்.