தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மியன்மார் சென்ற குடிமைத் தற்காப்புப் படையினர் 80 பேரில் 48 பேர் முஸ்லிம்கள்: அமைச்சர் சண்முகம்

மியன்மார் மீட்புப் பணியில் பங்காற்றும் முஸ்லிம் அதிகாரிகளைப் பாராட்டிய அமைச்சர்

2 mins read
பெருநாள் கொண்டாட்டத்தைத் தியாகம் செய்து பணியாற்றச் சென்ற அவர்களுக்கும் குடும்பத்தார்க்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துக்கொண்டார்
407c4674-965d-40cd-899d-cb01a819f2dd
முஸ்லிம் சமூகத்தினருக்கு நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளை உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார். - படம்: த.கவி
multi-img1 of 3

நிலநடுக்கத்தால் சீர்குலைந்துபோயிருக்கும் மியன்மாரில் மீட்பு நடவடிக்கைகளில் உதவச் சென்றுள்ள சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் 80 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள்.

தங்கள் அன்புக்குரியவர்களுடன் நோன்புப் பெருநாளைக்‌ கொண்டாட முடியாமல், வெளியூரில் பிறருக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்த 48 அதிகாரிகளின் தியாகத்திற்கும் அவர்களது குடும்பத்தினரின் புரிந்துணர்விற்கும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் நன்றி தெரிவித்தார்.

“பெருநாள் கொண்டாட்டத்தின்போது குடும்பத்துடன் இல்லாமல், தொலைதூரம் சென்று மற்றவர்களுக்கு உதவுவது மிகவும் உன்னதமான செயல்,” என்று அவர் பாராட்டினார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அகமது இப்ராகிம் பள்ளிவாசலுக்குத் திங்கட்கிழமை (மார்ச் 31) வருகை தந்திருந்த நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்மையில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கிய ஆடவர் ஒருவரை எட்டு மணிநேரம் போராடி உயிருடன் மீட்டெடுத்ததை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“இரவும் பகலும் அயராமல் அவர்கள் அங்கு உழைக்கின்றனர்,” என்றார் அவர்.

நீ சூன் குழுத்தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான கேரி டான், டெரிக் கோ, லூயிஸ் இங் மூவரும் திரு சண்முகத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களுடன், நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரான சையது ஹருன் அல்ஹப்‌ஷியும் மக்கள் செயல் கட்சிப் புதுமுகமான ஜாக்சன் லாமும் அங்குக் காணப்பட்டனர்.

உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகமும் (இடது) நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரான சையது ஹருன் அல்ஹப்‌ஷியும்.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகமும் (இடது) நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரான சையது ஹருன் அல்ஹப்‌ஷியும். - படம்: த.கவி

நீ சூன் குழுத்தொகுதியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

அண்மையில், மரின் பரேட் தொகுதி உலாக்களில் டாக்டர் ஃபைஷல் காணப்பட்டதைத் தொடர்ந்து, வரும் பொதுத் தேர்தலில் அவர் அங்கு போட்டியிடுவாரா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்டபோது, மக்கள் செயல் கட்சியின் மத்தியச் செயற்குழுவே இறுதி முடிவை எடுக்கும் என்பதால் தாம் உறுதியான பதிலை இப்போதைக்கு வழங்க இயலாது எனத் திரு சண்முகம் தெரிவித்தார்.

“எனினும், அவர் மரின் பரேட் வட்டாரத்தில் அதிக நேரம் செலவிடுவதைப் பொதுமக்கள் கண்டுள்ளனர். என்ன நடக்கக்கூடும் என்பதற்கு இது ஓர் அறிகுறியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய முகங்களான டாக்‌டர் ஹரூனும் திரு லாமும் நீ சூன் குழுத்தொகுதியைப் பிரதிநிதித்து வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்களா என்ற கேள்விக்கு உறுதியான பதில் ஏதும் அளிக்காமல், அவர்கள் இருவரும் சமூகத்துக்குச் சிறந்த முறையில் தொண்டாற்றக்கூடிய திறன்வாய்ந்தவர்கள் என்றார் திரு சண்முகம்.

மக்கள் செயல் கட்சியின் புதிய முகங்களான திரு லாமும் (இடம்) டாக்‌டர் ஹரூனும்.
மக்கள் செயல் கட்சியின் புதிய முகங்களான திரு லாமும் (இடம்) டாக்‌டர் ஹரூனும். - படம்: த.கவி

ஈசூன் குடியிருப்பாளர்களுக்குச் சேவை செய்யும் திறனுள்ளவர்களையே அவர்கள் முன்வைப்பார்கள் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் ஆறு பேரும் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வந்திருந்தோருடன் உரையாடி, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதுடன் முஸ்லிம் சமூகத்தினருக்கு நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்