ஈசூன் வட்டாரத்தில் 35 வயது ஆடவரைக் கொலை செய்ததாக 49 வயது ஆடவர் மீது ஜூலை 28ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.
ஜூலை 27ஆம் தேதியன்று, ஈசூன் ரிங் சாலை புளோக் 803ன் பத்தாவது மாடி மின்தூக்கித் தளத்தில் திரு ஃபிக்ரி சூ இஸ்கந்தரை எஃபென்டி யூசோஃப் கொன்றதாகக் கூறப்படுகிறது.
எஃபென்டி ஜூலை 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
சம்பவம் குறித்து ஜூலை 27 காலை 8.35 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது ஆடவர் ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதை அதிகாரிகள் கண்டனர்.
அவர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.
மரணமடைந்த திரு ஃபிக்ரியும் அவரைக் கொன்றதாகக் கூறப்படும் எஃபென்டியும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் ஜூலை 27ஆம் தேதியன்று சம்பவ இடத்தை அடைந்தபோது, அங்குள்ள மின்தூக்கித் தளத்தில் சடலம் ஒன்று துணியால் போர்த்தப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
தரையிலும் சுவரிலும் ரத்தக் கறை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கட்டடத்தின் பத்தாவது மாடிக்குள் யாரும் நுழைய முடியாதபடி தடுப்பு போடப்பட்டிருந்தது.
சம்பவம் நிகழ்வதற்கு முன்பு இரண்டு ஆடவர்களுக்கிடையே மிகக் கடுமையான வாக்குவாதம் நடந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய குடியிருப்பாளர்கள் கூறினர்.
வாக்குவாதம் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு நீடித்ததாக அறியப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் எஃபென்டிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.