அன்றாட வாழ்விலும் வணிகங்களிலும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இச்சூழலில், நம்மை இன்று பாதுகாக்கும் இணையப் பாதுகாப்புத் தீர்வுகள் நாளைய சவால்களை எதிர்கொள்ளப் போதுமானதாக இருக்காது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கூறியுள்ளார்.
உருமாறிவரும் புதிய அச்சுறுத்தல்களுக்கேற்ப நாம் புதிய அணுகுமுறைகளையும் ஆற்றல்களையும் உருவாக்கி, தொடர்ந்து புத்தாக்கம் காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) நடைபெற்ற சைபர்எஸ்ஜி புத்தாக்க நாள் 2026 தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
நீண்டகால தேசிய இணைய மீள்திறனை மேம்படுத்துவதற்காக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ‘சைபர்கால் 2025’ திட்டத்தின்கீழ் 13 நிறுவனங்களுக்கு ஏறத்தாழ $5.6 மில்லியன் நிதி அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, ஐரோப்பியப் பேரங்காடிகளின் குளிரூட்டும் கட்டமைப்பு அமைப்புகளைக் குறிவைத்து இணைய ஊடுருவிகள் தாக்குதல் நடத்திய அண்மைய நிகழ்வுகளை திருவாட்டி ரஹாயு சுட்டிக்காட்டினார்.
இணையப் பாதுகாப்பு என்பது வெறும் கணினி அமைப்புகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், மக்கள் நாளும் நம்பியிருக்கும் அத்தியாவசியச் சேவைகளையும் பாதுகாப்பது என்பதை இத்தகைய சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன என்று அவர் கூறினார்.
மேலும், அதிநவீனத் தாக்குதல்களை எளிதாக நடத்துவதற்குச் செயற்கை நுண்ணறிவு வழிவகுத்துள்ளது என்றும் குறைந்த திறன்கொண்ட ஊடுருவிகள்கூட பேரளவிலான இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
அதேவேளையில், சிங்கப்பூரே அனைத்து இணையப் பாதுகாப்புத் தீர்வுகளையும் சொந்தமாக உருவாக்க முடியாது என்று குறிப்பிட்ட திருவாட்டி ரஹாயு, உலகெங்குமிருந்து சிறந்த கருத்துகளையும் தொழில்நுட்பங்களையும் நடைமுறை நோக்குடன் பயன்படுத்த வேண்டும் என்றார்.
உள்நாட்டுப் பாதுகாப்புத் தேவைகளுக்கேற்ப சொந்தமாகத் தீர்வுகளைக் காணும் நிபுணத்துவமும் அவசியமாகும்.
ஒரு வலுவான சூழலமைப்பை உருவாக்குவதில் அதிநவீனத் திறன்களை வளர்ப்பது, புதுமைகளை நடைமுறைப் பயன்பாட்டிற்கு மாற்றுவது, வளர்ந்துவரும் நிறுவனங்கள் உலகளவில் போட்டியிட உதவுவது ஆகியவற்றில் சிங்கப்பூர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் துணை அமைச்சர் ரஹாயு கூறினார்.
