தன்னுடல் தாக்குநோயை எதிர்கொள்ள $5.8 மில்லியன் ஆய்வுத் திட்டம்

தன்னுடல் தாக்குநோயை எதிர்கொள்ள $5.8 மில்லியன் ஆய்வுத் திட்டம்

2 mins read
2ae2d551-df2f-406a-9853-d7d685a24fcd
‘சிஸ்டமிக் ஸ்கெலரோசிஸ்’ எனும் தன்னுடல் தாக்குநோய் ஆசிய மக்கள்தொகையில் 100,000 பேரில் எண்மரைப் பாதிக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பொது மருத்துவமனை தலைமையிலான ஆய்வாளர் குழு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்னுடல் தாக்குநோயை (autoimmune disease) ஒன்றை இன்னும் சிறந்த வகையில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க $5.77 மில்லியன் மதிப்பிலான ஐந்தாண்டு ஆய்வுத் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

கடந்தகாலத் தரவுகளைக் கொண்டு வருங்கால விளைவுகளைக் கண்டறியும் முறையை உருவாக்குவதை ஆய்வாளர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். உடல்நிலை மோசமைடையக்கூடியவர்களை முன்கூட்டியே அடையாளம் காணும் சோதனை முறையையும் உறுதிப்படுத்த அவர்கள் இலக்கு கொண்டுள்ளனர்.

‘சிஸ்டமிக் ஸ்கெலரோசிஸ்’ எனும் இந்தத் தன்னுடல் தாக்குநோய் ஆசிய மக்கள்தொகையில் 100,000 பேரில் எண்மரைப் பாதிக்கிறது.

சிங்கப்பூரில் எந்தவொரு நேரத்திலும் ஏறக்குறைய 500 முதல் 600 பேர் வரை இந்நோயுடன் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 10 முதல் 15 பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நோய்க்கான சரியான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், மரபியல், சுற்றுச்சூழல் அம்சங்கள் சேர்ந்து இதற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நோய் ஆரோக்கியமான திசுக்களையும் உயிரணுக்களையும் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் தவறுதலாகக் குறிவைத்துத் தாக்குகிறது. இதனால் தோல், நுரையீரல்கள், இதர உறுப்புகள் தடித்து, கடினமடைகின்றன.

ஏஸ்டார் மானியத்தால் நிதிபெறும் இந்த ஆய்வுத் திட்டம், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை (மே 22) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

நோயாளிகளின் மரபணுக்கள், நோயெதிர்ப்பு மண்டலதிடமிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய மருத்துவ அறிவியலாளர்களையும் ஆய்வுக்கூட நிபுணர்களையும் இத்திட்டம் ஒன்று திரட்டுகிறது.

இந்நோய் கண்டறியப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கழித்து 52 விழுக்காட்டு ஆசியர்களே உயிருடன் இருப்பதை ஆய்வு காட்டுகிறது. ஒப்புநோக்க, உயிருடன் உள்ள வெள்ளை இனத்தவர்களின் விகிதம் 76 விழுக்காடு.

குறிப்புச் சொற்கள்