படிப்பை எளிதாக்க உதவும் செயலிகள்

3 mins read
ec34acc4-24e4-44f1-8a9f-86309d5823e4
தொழில்நுட்ப வளர்ச்சியால் ‘நோட்புக் LM’ , ‘போமோஃபோக்கஸ்’ போன்ற இலவசச் செயலிகள் மாணவர்களுக்கு உதவுகின்றன.  - படம்: எஃப்எம்டி

முன்பெல்லாம் மாணவர்கள் தங்களுடைய வகுப்புப் பாடங்களுக்கான குறிப்புகளைச் சிரமப்பட்டு கையால் எழுதி, கோப்புகளில் சேமித்து வைத்துக்கொள்வர்.

முக்கியமான நேரத்தில் தேவைப்படும்போது, அவர்கள் அந்தக் குறிப்புகளைக் கண்டுபிடிக்க பெரிதும் சிரமப்படுவர்.

ஆனால், இப்போது அந்தச் சிரமம் இல்லை.

இந்தக் காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் பள்ளிப் பாடங்களுக்கான குறிப்புகளைத் தாள்களில் எழுதிக் குவிக்கத் தேவையில்லை. தொழில்நுட்பம் அவர்களுக்குக் கைகொடுப்பதே இதற்குக் காரணம்.

மாணவர்களுக்காகவே ‘நோட்புக் LM’ (Notebook LM) , ‘போமோஃபோக்கஸ்’ (Pomofocus), ‘நோஷன்’ (Notion) போன்ற பல இலவசமான படிப்பு சார்ந்த செயலிகள் இருக்கின்றன.

இந்தச் செயலிகளின் மூலமாக, மாணவர்கள் தங்கள் பாடநூல்களில் உள்ள தகவல்களை எளிதாகப் புரியும்படி சுருக்கி, தங்கள் சொந்தக் குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இவற்றில் ஒன்றுதான் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையிலான ‘நோட்புக் எல்எம்’ செயலி. கூகல் நிறுவனத் தயாரிப்பான இச்செயலியின் மூலமாக, மாணவர்கள், பிடிஎஃப் கோப்புகள், பயிற்சிநூல் தகவல்கள், இணையக் கட்டுரைகள் அல்லது ‘யூடியூப்’ காணொளி இணைப்புகள் போன்றவற்றைப் பதிவேற்றி, சுருக்கப் பதிப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இந்தச் செயலி சிக்கலான கருத்துகளை எளிய முறையில் மாணவர்களுக்குப் புரியும்படி விளக்கும்.

இதேபோல, ‘எவெர்னோட்’ (Evernote) என்ற செயலியும், பதிவேற்றிய ஆவணங்களை சுருக்கித் தரும். அச்செயலியில் இருக்கும் தேடல் வசதியின் மூலம், குறிப்புகளில் உள்ள முக்கியச் சொற்களை மட்டுமன்றி, படங்களுக்குள் உள்ள உரையையும் தேடி, தேவையான குறிப்புகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

முக்கிய தகவல்களைச் சுருக்கித் தரும் செயலிகளோடு, மாணவர்களுக்கு நேரக் கண்காணிப்புச் செயலிகளும் பயனுள்ளவையாக விளங்கும்.

‘போமோஃபோக்கஸ்’, ‘யோல்பும்டா’ (Yeolpumta, YPT) போன்ற செயலிகள் ‘போமோடோரோ’ முறையைப் பயன்படுத்தி, மாணவர்களுடைய கவனத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

போமோடோரோ முறையைப் பின்பற்றும் மாணவர்கள், குறுகிய நேர இடைவெளிகளில் முழுக் கவனத்துடன் படித்த பிறகு சிறு இடைவேளைகளை எடுக்க முடியும். அதனால், சோர்வடையாமல் அவர்களால் நீண்ட நேரம் படிக்க முடிகிறது. மேலும், படிப்பைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரிப்பதால் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ளவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

படித்துக்கொண்டிருக்கும்போது, சில நேரங்களில் சிறிது நேரம் கைப்பேசியைத் திறந்து சமூக ஊடகங்களைக் காண்போம் அல்லது விளையாட்டு விளையாடுவோம் போன்ற எண்ணங்கள் தோன்றலாம். அந்த எண்ணங்களைத் தடுத்து, கவனத்துடன் படிப்பதற்காகவே ‘யோல்பும்டா’ செயலியில் கவனம் சிதறும் செயலிகளைத் தடுக்கும் வசதி உள்ளது. அச்செயலியின் மூலமாக, மாணவர்கள் படிப்புக் குழுக்களை உருவாக்கி, தங்களுடைய நண்பர்களோடு சேர்ந்து ஒரே நேரத்தில் படிக்கலாம்.

வகுப்புகளில் ஒரே நாளில் நிறைய தகவல்களைக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள், அத்தகவல்களை எவ்வாறு புரிந்துகொண்டு மனப்பாடம் செய்வது எனச் சிந்திக்கலாம். அதற்காகவே ‘குவிஸ்லெட்’ (Quizlet) எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்தச் செயலியின் மூலமாக தங்களுடைய பாடநூல்களில் இருக்கும் தகவல்களை வைத்து சுவாரசியமான, சிறிய தேர்வுகளை உருவாக்கலாம். மேலும், பாடப்பகுதிகளை நினைவில் வைத்துக்கொள்ள ‘ஃபிளாஷ்கார்ட்’களை தனியாக உருவாக்கலாம் அல்லது ஏற்கெனவே தயார்செய்த பாடத்தொகுப்புகளைப் (Study sets) பயன்படுத்தலாம்.

இறுதியாக, மாணவர்கள் ‘நோஷன்’ (Notion) செயலியைக் கொண்டு, தாங்கள் தயார்செய்த அனைத்துக் குறிப்புகளையும் ஒரே இடத்தில் வைத்துக்கொண்டு, பாடங்களின் அடிப்படையில் குறிப்புகளை கோப்புறைகளில் (file folder) ஒழுங்குபடுத்தலாம். மேலும், அச்செயலி வழியாக மாணவர்கள் சக மாணவர்களோடு குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் உதவவும் முடியும். அதன்மூலம் அவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் வலுப்படுத்தலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்கு உதவக்கூடிய பல செயலிகள் உள்ளன. அச்செயலிகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்தினால், அவர்களுடைய கவனமும் செயல்திறனும் மேலும் மேம்படும்.

குறிப்புச் சொற்கள்