தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைக்குப் புத்துயிரூட்ட $5 பில்லியனில் புதிய திட்டம்

2 mins read
aaa8312c-700c-4687-ab8c-b5619f72aeaa
செய்தியாளர் சந்திப்பில் (இடமிருந்து) சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் சியா டெர் ஜியுன், நிதி இரண்டாம் அமைச்சரும் நாணய ஆணையத்தின் துணைத் தலைவருமான சீ ஹொங் டாட், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் லீ சுவான் டெக். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையை வலுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மறுஆய்வுக் குழு, பங்குச் சந்தையில் சில்லறை, நிறுவன முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூர்ப் பங்குகளில் முதலிடும் வகையில், தேர்வுசெய்யப்படும் நிதி மேலாளர்களுடன் இணைந்து செயல்படுவதற்காக $5 பில்லியனில் புதிய திட்டம் ஒன்றை சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிமுகப்படுத்தும்.

பங்குச் சந்தை வளர்ச்சித் திட்டம் (EQDP) எனும் அத்திட்டத்திற்கு நாணய ஆணையத்தின் முதலீட்டுப் பிரிவும் நிதித் துறை மேம்பாட்டு நிதியும் நிதியாதரவு வழங்கும்.

உள்ளூர்வாசிகளும் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட வெளிநாட்டு நிதி மேலாளர்களும் நிர்வகிக்கும் பல்வேறு நிதிகளில் அத்திட்டம் முதலீடு செய்யும்.

முதலீட்டாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தரமிக்க பொதுப் பங்கு வெளியீடுகளை இடம்பெறச் செய்வதும், நிறுவனச் செயல்பாடுகளை, பங்குதாரர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூரில் அதிகக் கவனம் செலுத்தும் நிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம்.

தகுதியுள்ள நிதி மேலாளர்களையும் உத்திகளையும் மதிப்பீடு செய்யும் பணியை ஆணையம் அடுத்த சில மாதங்களில் தொடங்கும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான நடைமுறையைச் செயல்திறன் மிக்கதாக ஆக்குவதற்கு, அதற்கான ஒழுங்குமுறைகள் நெறிப்படுத்தப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா போன்ற பெரிய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் ஆர்வத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போகும் உள்ளூர் மற்றும் இவ்வட்டார நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையை உருவாக்க கவனம் செலுத்தப்படும் என்று நிதி இரண்டாம் அமைச்சர் சீ ஹொங் டாட் குறிப்பிட்டார்.

அத்துடன், உள்ளூர்ப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் அதிக முதலீடுகளை ஈர்க்க ஆதரவளிக்கும் வகையில், தனது உலகளாவிய முதலீட்டாளர் திட்டத்தையும் ஆணையம் அளவீடு செய்யும்.

கடந்த வாரம் இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்த பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் அதிகமான உள்ளூர் நிறுவனங்களையும் நிதி மேலாளர்களையும் ஈடுபடுத்தும் நோக்கில் வரிச்சலுகைகளை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்