ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி காயம் விளைவித்த தனித்தனி சம்பவங்களின் தொடர்பில் 43 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து ஆடவர்கள் மீது புதன்கிழமை (மார்ச் 26) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
2024 ஆகஸ்ட் 28ஆம் தேதி 2025 ஜனவரி 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடந்த சம்பவங்களில் அந்த ஆடவர்கள் சிவப்பு விளக்கு சமிக்ஞையில் நிறுத்தத் தவறியதாக காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஓட்டுநர்களில் ஒருவரான 73 வயது ஆடவர் 2024 ஆகஸ்ட் 28ஆம் தேதி கிளமெண்டி ரோடு, மாஜூ டிரைவ் சந்திப்பில் சிவப்பு விளக்கில் நிறுத்தத் தவறினார். வலப்பக்கம் திரும்பிக்கொண்டிருந்த மற்றொரு காருடன் அவர் மோதியதில் மற்ற ஓட்டுநருக்குக் காயங்கள் ஏற்பட்டன. அவர் மீண்டும் குற்றம் புரிந்துள்ளார்.
அவருக்கு $20,000 வரை அபராதமும் மீண்டும் குற்றம் புரிந்ததற்காக நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
2024 ஆகஸ்ட் 29ஆம் தேதி ஜாலான் அகமது இப்ராஹிம், துவாஸ் வெஸ்ட் ரோடு சந்திப்பில் சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் லாரியை ஓட்டிச் சென்ற 44 வயது ஓட்டுநர் மோட்டார் சைக்கிளில் மோதினார். மோட்டார் சைக்கிளோட்டி மணிக்கட்டு முறிவு உட்பட பல காயங்களுக்கு உள்ளானார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநர் மீது குற்றம் சாட்டப்படும். மேலும், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
2025 ஜனவரி 17ஆம் தேதி நடந்த சம்பவத்தில், தோ குவான் ரோடு, ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரல் சந்திப்பில் 57 வயது ஆடவர் சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் சென்று மற்றொரு காருடன் மோதினார். அந்த விபத்தில் மோதிய காரில் இருந்த பயணி, மோதப்பட்ட மற்ற காரின் ஓட்டுநர், அவரின் இரண்டு பயணிகள் ஆகிய நான்கு பேர் காயமடைந்தனர்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி காயம் விளைவித்தால் $10,000 வரை அபராதமும் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
மற்ற இரு சம்பவங்களில் சந்தேக நபர்கள் மீது ஆபத்தான முறையில் வாகனமோட்டி காயம் விளைவித்த குற்றம் சுமத்தப்படும்.
சந்தேகப் பேர்வழிகள் ஐவரும் அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டுவதற்குத் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.