தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில் சேவைத் தடை: ஐவர் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகளுக்குத் தாமதமாகச் சென்றனர்

2 mins read
24091cd9-b526-4822-9708-b9f233d0620c
திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 30) பூன் லே ரயில் நிலையத்துக்குச் செல்ல ஜூரோங் ஈஸ்ட் நிலையத்தில் சிறப்பு ரயில் சேவைக்காகக் காத்திருந்த பயணிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிழக்கு-மேற்கு பெருவிரைவு ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள சேவைத் தடை காரணமாக திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 30) தொடக்கப் பள்ளி இறுதியாணடுத் தேர்வுகள் (PSLE), பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வுகளை (GCE N-Level) எழுதும் மாணவர்களில் ஐவர் தாமதாகச் செல்ல நேரிட்டது என்று சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம் (SEAB) தெரிவித்துள்ளது.

சுமார் 41,000 மாணவர்கள் தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகளையும் 5,700 மாணவர்கள் பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலை அறிவியல் பாடத் தேர்வுகளையும் திங்கட்கிழமை காலை எழுதவிருந்தனர். கிழக்கு மேற்கு ரயில் பாதையில் திங்கட்கிழமையன்று தொடர்ந்து ஆறாவது நாளாக சேவைத் தடை நீடித்தது.

“தொடக்கப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகளை எழுதும் ஒருவரும் பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் தேர்வுகளை எழுதும் நால்வரும் ரயில் சேவைத் தடை காரணமாக இன்று காலை தாமதமாகச் செல்ல நேரிட்டது.

“வழக்கநிலைத் தேர்வுகளை எழுதும் அந்த நான்கு மாணவர்களில் மூவர் தனியார் மாணவர்கள். பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஐவரும் தேர்வு முடிவடையவிருந்த வேளையில் சம்பந்தப்பட்ட தேர்வு நிலையங்களைச் சென்றடைந்தனர். அவர்கள் சுமுகமான முறையில் தேர்வை எழுதி முடிக்க நிர்ணயிக்கப்பட்ட முழு நேரம் அளிக்கப்பட்டது,” என்று சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம் தன்னிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 27) முக்கியத் தேர்வுகளை எழுதும் எந்த மாணவரும் ரயில் சேவைத் தடையால் பாதிக்கப்படவில்லை என்றும் கழகம் குறிப்பிட்டது. அன்று தொடக்கப் பள்ளி இறுதியாண்டு கணிதம், அடிப்படைக் கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

அதேவேளை, ரயில் சேவைத் தடை ஏற்பட்ட இரணடாம் நாளான வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 26), தொடக்கப் பள்ளி இறுதியாண்டு ஆங்கில, அடிப்படை ஆங்கிலப் பாடத் தேர்வுகளை எழுதிய 41,000 மாணவர்களில் ஐவர் தாமதமாகச் செல்ல நேரிட்டது.

ரயில் சேவைத் தடை காரணமாக தேர்வுகளுக்குத் தாமதமாகச் செல்லும் மாணவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம் புதன்கிழமையன்று (செப்டம்பர் 25) அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்