தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்ஸ் ஆட்கடத்தல் கும்பலிடமிருந்து 4 சிங்கப்பூரர்கள் மீட்பு

1 mins read
04d251aa-34b1-4319-99f6-e8953b866a7e
ஜூன் 27ஆம் தேதி பிலிப்பீன்ஸ் காவல்துறையினர் தலைநகர் மணிலாவிற்குத் தெற்கே உள்ள சிறிய நகரம் ஒன்றில் ஆட்கடத்தல் தொடர்பில் சோதனை நடத்தினர். - படம்:ஏஎஃப்பி

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆட்கடத்தல் தொடர்பில் காவல்துறை அண்மையில் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் மீட்கப்பட்ட ஏறத்தாழ 3,000 பேரில் நால்வர் சிங்கப்பூரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற இணைய விளையாட்டு மையத்தில் வேலை தருவதாக உறுதிகூறி மோசடிக்காரர்கள் அவர்களை அங்கு அழைத்துச் சென்றதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும் அவர்களைச் சட்டவிரோதமாக இணையக் காதல் மோசடி, மின்னிலக்க நாணய மோசடி போன்றவற்றில் ஈடுபடுத்த மோசடிக்காரர்கள் திட்டமிட்டிருக்கக்கூடும் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

மணிலாவுக்கு அருகே அமைந்திருக்கும் லாஸ் பினாஸ் நகரின் ஏழு கட்டடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் 2,724 பேர் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்டோரில் கிட்டத்தட்ட பாதிப்பேர் பிலிப்பீன்சைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 1,190 பேர் வெளிநாட்டினர். மீட்கப்பட்ட வெளிநாட்டினரில் பெரும்பாலோர் சீனா, வியட்னாம், இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

சிங்கப்பூரர்களில் ஒருவர் ஒரு கட்டடத்திலும் மற்றவர்கள் மற்றொரு கட்டடத்திலும் இருந்து மீட்கப்பட்டனர்.

ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டோரையும் அதன் பின்னணியில் இருப்போரையும் இனம்காணும் முயற்சி தொடர்வதாக பிலிப்பீன்ஸ் தேசிய காவல்துறையின் இணையக்குற்ற ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

இப்போதைக்கு மீட்கப்பட்ட வெளிநாட்டினர் அனைவருமே லாஸ் பினாஸ் நகரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யார் மீது குற்றம் சாட்டப்படும், யார் அவரவர் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று பின்னர் முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்