விமானப் பாதுகாப்பு தரவுகளை பகிர்ந்துகொள்ளும் 5 தென்கிழக்காசிய நாடுகள்

விமானப் பாதுகாப்பு தரவுகளை பகிர்ந்துகொள்ளும் 5 தென்கிழக்காசிய நாடுகள்

2 mins read
314108ed-0dfb-4836-bcd3-c3b3af390f1c
விமான பாதுகாப்பு தரவுகளை பகிர்ந்துகொள்வது குறித்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஐந்து நாடுகளும் கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தின.  - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ்  ஆகிய ஐந்து நாடுகள் தங்களது விமான பாதுகாப்புத் தரவுகளை பகிர்ந்துகொள்ளவுள்ளன.

அதுகுறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஐந்து நாடுகளும் புதன்கிழமை (அக்டோபர் 16) கையெழுத்திட்டன. 

தரவுகள் இவ்வாண்டு இறுதியில் இருந்து பகிர்ந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நாடுகளின் விமான அமைப்புகள் கூட்டறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளன.

வானில் விமானம் திடீரென ஆட்டம் கொள்வது உள்ளிட்ட தரவுகளை விமான அமைப்புகள் பகிர்வதால் விமானப் பயணங்கள் மேலும் பாதுகாப்பாக அமையும் என்று அவை தெரிவித்தன. 

கொவிட்-19 பாதிப்பில் விமான போக்குவரத்து மீண்டுவந்துள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விமான பாதுகாப்புத் தரவுகளைப் பகிர்ந்துகொள்வது குறித்து ஐந்து நாடுகளும் கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தின. அதன் பின்னர் எந்தெந்த தரவுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எது வேண்டாம் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்பட்டது.

“ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து இதுபோன்ற நடவடிக்கையில் இடம்பெறுவது இதுவே முதல்முறை. சம்பந்தப்பட்ட நாடுகள் பாதுகாப்புத் தரவுகளையும் தகவல்களையும் பகிர்வது ஆபத்தை தடுக்கும், மேலும் முன்னெச்சரிகையாகச் செயல்பட உதவும்,” என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஒப்பந்தத்தின்படி நாடுகள் முதலில் ஏழு பிரிவுகளின் கீழ் தரவுகளை பகிர்ந்துகொள்ளவுள்ளன.  மோதல் எச்சரிக்கைகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களால் அனுமதிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகுவது, விமான நிலையத்தில் எச்சரிக்கை கட்டமைப்புகளை செயல்படுத்துவது உள்ளிட்டவை அதில் அடங்கும். 

பறவைகளால் தாக்கப்படுவது, விமானத்தில் ஆபத்தான பொருள்களை எடுத்துச்செல்வது, நடுவானில் ஏற்படும் திடீர் ஆட்டம், காற்றின் வேகத்தில் திடீர் மாற்றம் போன்ற தரவுகளையும் தங்களுக்குள் அமைப்புகள் பகிர்ந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

குறிப்புச் சொற்கள்