விலை அதிகரிப்பால் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; வாடகை, ஊழியர்களை வேலைக்கு எடுப்பது ஆகியவற்றின் தொடர்பில் வர்த்தகங்கள் சவால்களை எதிர்நோக்குவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டார்.
சவால்களைக் கையாள 2025 நிதியாண்டில் நிறுவனங்களுக்கு 50 விழுக்காடு வரித் தள்ளுபடி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதிகச் செலவைக் கையாள்வதற்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க நிறுவனங்களுக்குக் கைகொடுப்பது இலக்காகும்.
எல்லா நிறுவனங்களும் லாபம் பார்ப்பதில்லை என்றும் சில நிறுவனங்கள் இந்த வரித் தள்ளுபடியால் பலனடையமாட்டா என்றும் திரு வோங் சுட்டினார். அதனால் கடந்த ஆண்டு குறைந்தது ஒரு சிங்கப்பூரரை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் குறைந்தது 2,000 வெள்ளி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.
இத்தொகை 40,000 வெள்ளிக்கு அதிகமாக இருக்காது.
அதோடு, படிப்படியான சம்பள உயர்வு முறை மேம்படுத்தப்படும் என்றும் திரு வோங் தெரிவித்தார். படிப்படியான சம்பள உயர்வு முறையின்கீழ் இவ்வாண்டு அரசாங்கம், சம்பந்தப்பட்டோருக்கான சம்பள உயர்வில் 30 விழுக்காட்டை ஏற்றுக்கொண்டிருந்தது, அந்த விகிதம் இப்போது 40 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டுக்கான இவ்விகிதம் 15 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படுகிறது.
செலவு தொடர்பான சவால்களை எதிர்நோக்கும்போதும் பல நிறுவனங்கள் குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முயற்சிகளை எடுத்து வருவதை எண்ணித் தாம் மகிழ்ச்சிகொள்வதாகப் பிரதமர் சொன்னார். அண்மை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்துக்குப் பிறகு எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் ஆகியவை அதிகரிக்கும் செலவுகளைக் கையாள உதவும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
“பொருளியலை வளர்த்து உற்பத்தித் திறனை அதிகரிப்பதே எதிர்காலத்தில் விலைவாசி அதிகரிப்பைச் சமாளிக்க ஆகச் சிறந்த வழி. அப்போதுதான் சிங்கப்பூரர்களால் கூடுதல் நிகர வருமானத்தையும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் அனுபவிக்க முடியும்,” என்று பிரதமர் வோங் விளக்கினார்.