பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) அதிகாலை தீ மூண்டது.
அதனைத் தொடர்ந்து, எட்ஜ்ஃபீல்ட் பிளெய்ன்ஸ், புளோக் 614பி குடியிருப்பாளர்களில் 50 பேர் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர்.
அந்த புளோக்கில் தீப்பிடித்தது பற்றி அதிகாலை 12.25 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மூன்றாவது மாடியில் உள்ள அவ்வீட்டின் படுக்கையறையில் இருந்த பொருள்களால் தீப்பிடித்ததாகக் கூறிய அந்தப் படை, விரைந்து தீ அணைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தோர் 50 பேரை வெளியேற்றிய நிலையில், அவர்கள் வருமுன்னரே ஐந்து குடியிருப்பாளர்கள் தாங்களாக தங்களது வீட்டுகளில் இருந்து வெளியேறிவிட்டனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று தெரிவித்த அந்தப் படை, தீப் பிடித்ததற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறியது.
காலையில் ஷின் மின் டெய்ல் நியூஸ் செய்தியாளர்கள் சென்று பார்த்தபோது தீப்பிடித்த வீட்டின் சுவர்கள் கறுமையாகவும் சன்னல்கள் நொறுங்கிய நிலையிலும் காணப்பட்டன.
மூன்றாவது மாடி குடியிருப்பாளர்கள் தாழ்வாரத்தைக் கழுவி சுத்தம் செய்துகொண்டிருந்ததையும் அந்தச் செய்தியாளர் கண்டார்.
தொடர்புடைய செய்திகள்
தீ விரைவாக அணைக்கப்பட்டதால், வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் அதிகாலை 2 மணி முதல் தங்களது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியதாக அவர் கூறினார்.
தீப்பிடித்த வீட்டில் ஐவர் வசித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

