ஏறக்குறைய 30 மீட்டர் தொலைவில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் நின்றுகொண்டிருப்பதையும் கவனிக்காமல் ஒரு தம்பதி, பூன் கெங் எம்ஆர்டி அருகே பரபரப்பான சாலையை ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.
அவர்கள், ஒரு லாரியின் இடுக்கில் நுழைந்து வேகமாக வந்த மோட்டார்சைக்கிள்களுக்கு இடையே புகுந்து மறுபுறம் ஓடினர்.
ஆனால் அங்கு அவர்களுக்காக போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் காத்திருந்தார்.
அவர்களது விவரங்களைப் பதிவு செய்த அந்த அதிகாரி, விதிகளைமீறி சாலையைக் கடந்ததற்காக அவர்களுக்கு தலா 50 வெள்ளி அபராதம் விதித்தார்.
ஜூலை 13ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது.
அதே நாளில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள், விழிப்புணர்வு, சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதில் சிக்கிய 24 முதல் 80 வயதுக்குட்பட்ட 10 பேரில் இந்தத் தம்பதியும் அடங்குவர்.
இதனை நேரில் பார்வையிடுவதற்காக ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளேட்டின் செய்தியாளர்கள் அழைக்கப்பட்டனர்.
சோதனையின்போது, குறைந்தது 20 பேர் விதிகளை மீறி சாலையைக் கடந்தனர் அல்லது கடக்க முயன்று காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அன்று பிற்பகல் 1.30 மணியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு ஐந்து போக்குவரத்து அதிகாரிகள் பூன் கெங் எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே சுற்றுக் காவலில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையைக் கடக்க முயன்ற சிலரைத் தடுத்து, அருகில் போக்குவரத்து விளக்குகள் உள்ள பாதசாரிகளுக்கான கடக்குமிடத்தில் சாலையைக் கடக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
குடையைப் பிடித்துக்கொண்டு தள்ளாடியபடி வந்த 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், பரபரப்பான அந்தச் சாலையில் கால் வைக்க முயன்றபோது அதிகாரி ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஐம்பது மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள பாதசாரி கடக்குமிடத்தைப் பயன்படுத்துமாறு அவர் அந்த மூதாட்டியிடம் கூறினார்.
அதை ஏற்றுத் தலையசைத்த அந்த மூதாட்டி, அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே அதே இடத்தில் சாலையைத் தாண்டி ஓடினார்.
மற்றொரு வயதான மூதாட்டியும் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் சேர்ந்து சாலையைக் கடந்து மறுபுறம் சென்றபோது, அங்கு நின்றிருந்த அதிகாரி அவர்களது விவரங்களைக் குறித்துக் கொண்டார்.
சிங்கப்பூரில் விதிகளை மீறிச் சாலையைக் கடந்ததற்காக 2025ஆம் ஆண்டில் 1,421 பேரும், 2024ஆம் ஆண்டில் 1,591 பேரும் பிடிபட்டனர். இந்த எண்ணிக்கை, 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பதிவான ஓராண்டுக்கான சராசரி எண்ணிக்கையான 1,000ஐ விட அதிகம்.

