500 வேலையிடச் சோதனைகளில் $230,000 அபராதம்: மனிதவள அமைச்சு

2 mins read
0b1d302f-15dd-4aff-9690-62eaad270eb1
கட்டுமானம், உற்பத்தி, கடல் சார்ந்த துறைகளில் இயந்திர பாதுகாப்பைக் குறிவைத்து மனிதவள அமைச்சு சோதனைகளை நடத்தியது. - படம்: மனிதவள அமைச்சு/ ஃபேஸ்புக்

மனிதவள அமைச்சு 514 வேலையிடங்களில் மேற்கொண்ட சோதனைகளை அடுத்து $230,100 மதிப்பிலான அபராதங்களையும் மூன்று வேலை நிறுத்த உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அந்தச் சோதனை நடவடிக்கைகள் ஏப்ரல், ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டன.

கட்டுமானம், உற்பத்தி, கடல் சார்ந்த துறைகளில் உள்ள இயந்திரப் பாதுகாப்பைக் குறிவைத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமை (ஜூலை 14) பதிவிட்டது. சோதனைகளின் மூலம் 1,263 பாதுகாப்பில்லாத நிலைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

பாதுகாப்பு இன்றி காணப்பட்ட கூர்மையுள்ள ஆபத்தான இயந்திரப் பாகங்கள், ஊழியர்களுக்குக் காயம் விளைவிக்கக்கூடிய சூழல்கள் போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

பளு ஏற்ற பயன்படும் ஃபோர்க்லிஃப்ட் (forklift) போன்ற இயந்திரங்களில் ஓட்டுநருக்கான இருக்கை வார், கண்ணாடிகள், விளக்குகள் ஆகியவையும் இல்லாமல் காணப்பட்டன. அத்தகைய சில இயந்திரங்களில் பழுதுகளும் இருந்தன.

மனிதவள அமைச்சு கடந்த ஆண்டு வெளியிட்ட வேலையிட பாதுகாப்பு, சுகாதார அறிக்கையின்படி 2024இல் மொத்தம் 587 பெரிய அளவில் காயங்கள் ஏற்படுத்திய விபத்துகள் நிகழ்ந்தன. 43 வேலையிட மரணங்கள் ஏற்பட்டன.

பெரிய விபத்துகளால் ஊழியர்கள் சில உடல் பாகங்கள், பார்வை, செவிப்புலன் ஆகியவற்றை இழந்தனர். வேறு சிலரின் நடமாட்டம் முடங்கியதாக அமைச்சு குறிப்பிட்டது.

கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் ஆக அதிகமான வேலையிட மரணங்களும் பெரிய விபத்துகளும் நேர்ந்தன. கட்டுமானத் துறையில் அத்தகைய சம்பவங்கள் 166. உற்பத்தித் துறையில் 125. கடல் சார்ந்த துறையில் 22 காயங்கள் விளைவித்த சம்பவங்கள் ஏற்பட்டன.

கடல் சார்ந்த துறையில் கடந்த ஆண்டு காயம் விளைவித்த விபத்துகளின் விகிதம் 100,000 ஊழியர்களில் 35.8. அந்த விகிதம் 2018ஆம் ஆண்டு 27.8ஆக இருந்தது.

இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில் சிறிய கட்டுமானத் தளங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளை அடுத்து மனிதவள அமைச்சு 7 வேலை நிறுத்த உத்தரவுகளைப் பிறப்பித்தது.

அமைச்சு விதித்த மொத்த அபராதங்களின் மதிப்பு $360,000க்கும் அதிகம்.

ஜனவரி, பிப்ரவரியில் 335க்கும் அதிகமான தளங்களில் நடத்திய சோதனைகளில் 800 மேற்பட்ட வேலையிட பாதுகாப்பு விதிமீறல்கள் அம்பலமாகின.

கட்டுமானத் துறையில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமான கடுமையான காயங்கள் விளைவித்த விபத்துகள் சிறிய கட்டுமானத் தளங்களில் நடந்தவை.

குறிப்புச் சொற்கள்