ரோலக்ஸ் கைக்கடிகாரம், ‘போக்கிமோன்’ அட்டைகளுக்கு $500,000 நிறுவன நிதி: ஆடவருக்குச் சிறை

1 mins read
1023ca33-a343-4b94-937f-0a440e520695
குற்றவாளியான லின்பெர்க் இயோ யூ வெய். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தான் வேலை செய்த நிறுவனத்தின் நிதியிலிருந்து இரண்டு மாத காலத்தில் 500,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைக் களவாடிய ஆடவருக்கு 19 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான 27 வயது லின்பெர்க் இயோ யூ வெய், அவ்வாறு களவாடிய பணத்தை ‘போக்கிமோன்’ (Pokemon) அட்டைகள், மறுவிற்பனை ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஆகியவற்றை வாங்கப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சூதாடவும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் கடன் அட்டைக் கட்டணங்களைச் செலுத்தவும் அந்தப் பணத்தைப் பயன்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றியதாக தன் மீது சுமத்தப்பட்டிருந்த ஒரு குற்றச்சாட்டை இயோ ஒப்புக்கொண்டார். புதன்கிழமையன்று (ஜனவரி 22) அவருக்குத் தீர்ப்பளிக்கும்போது மேலும் ஒரு குற்றச்சாட்டும் கருத்தில்கொள்ளப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் இயோ, உயிரியல் மருத்துவக் கருவிகளை விநியோகிக்கும் எஸ்பிடி சைன்டிஃபிக் (SPD Scientific) நிறுவனத்தில் கணக்கு நிர்வாகியாகப் (accounts executive) பணியாற்றினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் நிறுவனங்கள் செலுத்தும் கட்டணங்களுக்கான நடைமுறைகளை மேற்கொள்ளும் பொறுப்பில் அவர் இருந்தார். அப்போது அவர் நிறுவனத்தின் நிதியைக் களவாடினார்.

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியன்று இயோ கைது செய்யப்பட்டார். அப்போது, ஏமாற்றிப் பறித்த தொகையில் குறைந்தது 400,000 வெள்ளி அவரிடம் எஞ்சியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்