சிங்கப்பூரின் வடக்கு நீர்முகப்புப் பகுதிக்கு நடந்துசெல்லும் தூரத்திலும் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகிலும் அமையவுள்ள 1,563 வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) திங்கட்கிழமை (பிப்ரவரி 10) விற்பனைக்கு விட்டது.
புதிய உட்லண்ட்ஸ் நார்த் கோஸ்ட் பேட்டையில் முதன்முறையாக அறிமுகம் கண்டுள்ள இந்த வீடுகள், வீவக விற்பனைக்கு விட்டுள்ள 5,032 தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளில் அடங்கும்.
ஏனைய நான்கு திட்டங்கள் காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் அமைகின்றன.
இதுநாள் வரையிலான ஆகப்பெரிய எஞ்சிய வீட்டு விற்பனைத் திட்டத்தில், மேலும் 5,590 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றில், 10ல் ஏறக்குறைய நான்கு வீடுகள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய வீடுகள் 2025 முதல் 2028 வரை கட்டங்கட்டமாக கட்டி முடிக்கப்படும்.
எஞ்சிய வீட்டு விற்பனைத் திட்டத்தின்கீழ் பெரும்பாலான வீடுகள் அங் மோ கியோ, தெம்பனிஸ், தெங்கா, உட்லண்டஸ் ஆகிய வட்டாரங்களில் உள்ளன.
ஆக அண்மைய இந்த விற்பனைத் திட்டம், மூன்று பிரிவுகளின்கீழ் வீடுகளை வகைப்படுத்தும் புதிய முறையின்கீழ் இடம்பெறும் இரண்டாவது திட்டமாகும். பிடிஓ திட்டங்களை ஸ்டாண்டர்ட், பிளஸ், பிரைம் ஆகிய அந்த பிரிவுகளில் வீடுகள் வகைப்படுத்தப்படுகின்றன.
இந்த விற்பனைத் திட்டத்தில் இடம்பெறும் மூன்று ஸ்டாண்டர்ட் திட்டங்களில் உட்லண்ட்ஸ் நார்த் வெர்ஜ் திட்டமும் அடங்கும். ஸ்டாண்டர்ட் திட்டங்களின்கீழ் வாங்கப்படும் வீடுகள் விற்கப்படும்போது, மானியத்தைத் திரும்பப் பெறும் நிபந்தனை இருக்காது. இந்த வீடுகளில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வசிக்க வேண்டும்.
அட்மிரால்டி சாலையில் அமையும் உட்லண்ட்ஸ் நார்த் வெர்ஜ் திட்டத்தில் மொத்தம் 1,563 ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை, ஐந்தறை வீடுகள் இடம்பெறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஈசூனில் எதிர்வரும் குடியிருப்புப் பேட்டையான செஞ்சாருவில் இடம்பெறும் இரு வீட்டுத் திட்டங்கள் மொத்தம் 1,531 வீடுகளை வழங்கும்.
காலாங்/வாம்போவில் அமையும் தஞ்சோங் ரூ பார்க் ஃபிரண்ட், இந்த விற்பனையில் இடம்பெறும் ஒரே பிரைம் திட்டமாகும். இதன்கீழ் வாங்கும் வீடுகளை விற்கும்போது, 9 விழுக்காடு மானியத்தை வீவகவிடம் திரும்பத் தரவேண்டும்.
கேலாங் ரிவருக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் அமையும் இத்திட்டத்தில் மொத்தம் 812 ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை வீடுகள் இடம்பெறும். இதன் நான்கு புளோக்குகளில் ஒன்றில் 203 வாடகை வீடுகள் இருக்கும்.
குவீன்ஸ்டவுனில், பிளஸ் பிரிவில் இடம்பெறும் ஸ்டர்லிங் ஹொரைஸன் திட்டம், 1,126 ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை வீடுகளை வழங்குகிறது. குவீன்ஸ்டவுன் ரயில் நிலையத்திலிருந்து 10 நிமிட நடைதூரத்தில் அது அமைகிறது.
இத்திட்டத்துக்கான மானியத்தைத் திரும்பப் பெறும் விகிதம் 8 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

