பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில், சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து ஜனவரி 3ஆம் தேதி, 509 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் இணைந்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) வெளியிட்ட கூட்டறிக்கை இதனைத் தெரிவித்தது.
சிங்கப்பூர்ச் சுங்கத்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து அந்தக் கொள்கலனில் விரிவான சோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
கொள்கலன் இங்கு வருவதற்கு முன்னரே அதனுள் இருக்கும் பொருள்களின் ஊடுகதிர்ச் சோதனைப் படங்களின் அடிப்படையில் அது கூடுதல் சோதனைக்கு அடையாளம் காணப்பட்டது.
சோதனையின்போது பழுப்பு நிறப் பொருள் கொண்ட பொட்டலத்தை ஒரு பெட்டியில் ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அது தடை செய்யப்பட்ட போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்பட்டது.
எனவே, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. கூடுதல் சோதனையில் 902 கஞ்சாப் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அறிக்கை குறிப்பிட்டது.
முதற்கட்ட விசாரணையில் அவை சிங்கப்பூர் வழியாக வேறொரு நாட்டிற்குக் கொண்டுசெல்லப்படவிருந்தவை என்று தெரியவந்துள்ளது.
விசாரணை தொடர்கிறது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில், 500 கிராமுக்குமேல் எடைகொண்ட கஞ்சாவை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்தது நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

