சட்டவிரோதமாகப் பாலியல் ஊக்கமருந்தை உற்பத்தி செய்தல், மின்சிகரெட் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது ஆடவர் ஒருவர், சுகாதார அறிவியல் ஆணையம் நடத்திவரும் விசாரணையில் ஒத்துழைத்து வருகிறார்.
சுகாதார அறிவியல் ஆணையம் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) இத்தகவலை வெளியிட்டது.
தியோங் பாருவில் பியோ கிரெசென்ட் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 51,000 வெள்ளி மதிப்பிலான கட்டுப்படுத்தப்பட்ட பாலியல் ஊக்கமருந்து, மருந்து தயாரிப்புக் கருவிகள், 30 மின்சிகெரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கிட்டத்தட்ட 18,000 சட்டவிரோதப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பந்தப்பட்ட வீவக வீட்டில் தங்கியவர்கள் சுகாதாரப் பொருள்களை சட்டவிரோதமாகத் தயாரித்து சேகரிக்கக்கூடும் என்று தகவல் கிடைத்ததையடுத்து சுகாதார அறிவியல் ஆணையம் சோதனை மேற்கொண்டது.
உரிமம் வழங்கப்படாத இடங்களில் தயாரிக்கப்படும் சுகாதாரப் பொருள்களை உட்கொள்வோர் மோசமான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடும் என்று சுகாதார அறிவியல் ஆணையத்தின் சட்ட அமலாக்கப் பிரிவு இயக்குநர் ஏனி டான் தெரிவித்தார்.
இந்த சட்டவிரோதப் பொருள்கள் இணையத்தில் விற்கப்படுவதாக இதுவரை தெரியவில்லை என்று ஆணையம் கூறியது.
எனினும், இத்தகைய சட்டவிரோதப் பொருள்கள் இணையத்தில் விற்கப்படுவதைத் தவிர்க்குமாறு ஆணையம், மின்வர்த்தகத் தளங்களையும் சமூக ஊடகத் தளங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.