சீனாவில் 52 சிங்கப்பூரர்கள் கைது: பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகம்

சீனாவில் 52 சிங்கப்பூரர்கள் கைது: பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகம்

2 mins read
d9f25a7b-edb2-462b-9c28-a0227527ef42
குவாங்சி பகுதியில் நடத்தப்பட்ட சட்ட அமலாக்க நடவடிக்கையின்போது 52 சிங்கப்பூரர்கள் கைதுசெய்யப்பட்டதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சும் காவல்துறையும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

சீனாவின் குவாங்சி வட்டாரத்தில் சட்டவிரோதப் ‘பிரமிட்’ திட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 52 சிங்கப்பூரர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சும் காவல் துறையும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

வெளிநாடொன்றில் ஆக அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.

குவாங்சி பகுதியில் நடத்தப்பட்ட சட்ட அமலாக்க நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சீன அதிகாரிகளின் விசாரணை தொடர்வதால், மேலதிக விவரங்களை அறிய சிங்கப்பூர்க் காவல் துறை சீன அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் அந்தக் கூட்டறிக்கையில் அவை கூறின.

இது தொடர்பாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

அதில் பேசிய வெளியுறவு, உள்துறைக்கான இரண்டாம் அமைச்சர் சிம் ஆன், பெய்ஜிங்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகம், குவாங்சோவில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் தடுப்புக் காவலில் இருக்கும் 52 பேரையும் மூன்று முறை நேரில் சந்தித்து நலன் விசாரித்ததாகத் தெரிவித்தார்.

அத்துடன், அவர்களின் குடும்பத்துக்குத் தகவல் அனுப்புவது, நிர்வாகச் செயல்முறைகளில் உதவுவது போன்றவற்றில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் திருவாட்டி சிம் ஆன் கூறினார்.

சிங்கப்பூர் அரசு பிற நாடுகளின் சட்ட திட்டங்களிலும் நீதித்துறை நடவடிக்கைகளிலும் தலையிடாது என்பதை வலியுறுத்திய அவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோருக்குத் தேவையான தூதரக உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

“சிங்கப்பூர் விவகாரத்தைத் தொடர்ந்து கவனிக்கும். தமது குடிமக்கள் தகுந்த முறையில் நடத்தப்படவேண்டும்,” என்பதைத் திருவாட்டி சிம் வலியுறுத்தினார்.

சீனாவில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் ஒப்புதலின்றி 37 நாள்கள் வரை தடுத்து வைக்க முடியும். அதனைத் தொடர்ந்து சாட்சிகளைச் சேகரிக்க இரண்டு முதல் ஏழு மாதங்கள் வரை ஆகலாம்.

வழக்கின் தன்மைக்கேற்பச் சட்டவிரோத திட்டத்தில் ஈடுபடுவோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அல்லது அங்கு வசிக்கும்போது அந்நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும் என்றும் அதிக லாபம் தருவதாக உறுதியளிக்கும் சந்தேகத்திற்குரிய முதலீட்டுத் திட்டங்களில் கவனமுடன் இருக்குமாறும் சிங்கப்பூரர்களுக்குக் காவல்துறை நினைவூட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்