தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் மருந்தகத்துக்கு $52,000 வாடகை; அமைச்சர் ஓங் திகைப்பு

2 mins read
14e57f0a-9de1-4075-b7a1-865011572b8a
தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள தனியார் மருந்தகத்துக்கான வாடகை ஏலத்தில் $52,000க்கும் அதிகமான தொகை குறிப்பிடப்பட்டிருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிஸ் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டையில் உள்ள தனியார் மருந்தகத்துக்கான மாதாந்தர வாடகை ஏலம் $52,188 என்பதை அறிந்து திகைத்துப் போனதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.

இனிவரும் காலத்தில் குறைவான விலை, தரம் நிறைந்த பராமரிப்பு என்ற நடைமுறையின் கீழ் வீவக தனியார் மருந்தகங்களுக்கான மாதாந்தர வாடகை மதிப்பிடப்படும் என்று ஃபேஸ்புக்கில் புதன்கிழமை (ஜூன் 4) அவர் பதிவிட்டார்.

அதிகமான மாத வாடகை காரணமாக ஏதாவது ஒரு விதத்தில் சுகாதாரப் பராமரிப்புக்கான விலையும் அதிகரிக்கும் என்ற திரு ஓங், அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்பு விலையைக் கட்டுப்படியானதாக வைத்திருக்க சுகாதார அமைச்சு முன்னெடுக்கும் முயற்சிகள் பயனற்றுப்போகும் என்றார்.

“மிக முக்கியமாக, அதிக வாடகை என்றால் சமூகத்துக்குத் தேவையான சிறந்த சுகாதாரப் பராமரிப்பு வழங்கப்படும் என்று சொல்லிவிட முடியாது,” என்றார் அவர்.

தெம்பனிஸ் ஸ்திரீட் 96ல் உள்ள புளோக் 954Cயில் அமைந்திருக்கும் 50 சதுர அடி இடத்தில் செயல்படுவதற்கான குத்தகையை ஐ-ஹெல்த் மெடிக்கல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மார்ச் மாதம் வென்றது. அந்த இடத்துக்கான ஏலம் ஜனவரியில் முடிந்தது.

மக்கள்தொகை மூப்படையும் நிலையில், தனியார் மருந்தகங்களின் தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது என்று திரு ஓங் சுட்டினார்.

சுகாதார அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் பொது மருந்தகங்களின் ஏலத்துக்கான புதிய அணுகுமுறையைக் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. அதில் பராமரிப்பின் தரம் 70 விழுக்காட்டையும் வாடகை விலை 30 விழுக்காட்டையும் கொண்டிருக்கும்.

அந்தக் குத்தகை மே 29ஆம் தேதி மூடியது.

வீடமைப்புப் பேட்டைகளில் தனியார் மருந்தகத்தை நடத்துவோர் அரசாங்கத்திடமிருந்து அவற்றை நேரடியாக வாடகைக்குப் பெறுகின்றனர் அல்லது வர்த்தக இடங்களை நிர்வகிக்கும் உரிமையாளர்களிடமிருந்து பெறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்