மோசடி, கடன் முதலை நடவடிக்கைகள் தொடர்பில் 528 பேர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக 41 பேரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
பத்து மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் இடம்பெற்ற 2,200க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாக வியாழக்கிழமையன்று (ஜூலை 11) காவல்துறை தெரிவித்தது.
இந்த மாதம் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதிவரை பிடோக் காவல்துறைப் பிரிவு மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளின்போது அவர்கள் பிடிபட்டனர். அவர்கள் 14 முதல் 72 வயதிற்குட்பட்டவர்கள்.
அவர்களில் 425 பேருக்கு மின்வணிகம், முதலீடு, மோசடி, வேலை, வாடகை போன்ற மோசடிகளிலும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றங்களிலும் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மற்ற 103 பேருக்கும், $120,000க்கும் அதிகமான பணம் தொடர்புடைய கடன் மோசடிகளிலும் கடன் முதலை நடவடிக்கைகளிலும் பங்கிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை இடம்பெற்று வருகிறது.
ஏமாற்றுக் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுவரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுவரை சிறை அல்லது $500,000 வரை அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
கடந்த 2023ஆம் ஆண்டில் மோசடி தொடர்பில் 46,563 புகார்கள் பதிவாயின. இது 2022ஆம் ஆண்டைவிட 46.8% அதிகம். அவ்வாண்டில் 31,728 மோசடிப் புகார்கள் பதிவாயின.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு சிங்கப்பூரில் மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் $651.8 மில்லியன் பணத்தை இழந்தனர்.

