கல்வி அமைச்சின் இரு பாலர் பள்ளிகளில் 51 சிறுவர்கள் உட்பட 53 பேருக்கு இரைப்பை குடல் அழற்சிக்கான அறிகுறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ‘டெலி ஹப் கேட்டரிங்’ நிறுவனத்தின் உணவு வர்த்தகச் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தடை உத்தரவு அக்டோபர் 27 முதல் அமலுக்கு வந்துள்ளதாகத் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு, சிங்கப்பூர் உணவு அமைப்பு, கல்வி அமைச்சு ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
செங்காங் வட்டாரத்தின் ஸ்பிரிங்டேலில் உள்ள பாலர் பள்ளி, தெம்பனிசில் உள்ள கோங்ஷாங் பாலர் பள்ளி ஆகியவற்றில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அது குறித்து தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு அமைப்பும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் விசாரணை நடத்தி வருகின்றன.
கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 26) நிலவரப்படி, டெலி ஹப் கேட்டரிங் வழங்கிய உணவை உட்கொண்ட பிறகு, அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரையிலான காலகட்டத்தில் 51 மாணவர்களுக்கும் இரண்டு ஊழியர்களுக்கும் இரைப்பை குடல் அழற்சி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு பாலர் பள்ளிகளிலும் இயங்கும் ‘கிண்டர்கார்டன் கேர்’ நடத்தும் நிறுவனத்தால் ‘டெலி ஹப் கேட்டரிங்’ நிறுவனம் பணியமர்த்தப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் சிலர் வெளிநோயாளி சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் சிலர் மருந்து எடுத்துக்கொண்டனர் அல்லது சிகிச்சை எதுவுமின்றி குணமடைந்தனர் என்று அதிகாரிகள் கூறினர். இருப்பினும், எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
விசாரணைகளுக்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்ட பாலர் பள்ளிகள், தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு, சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவற்றுடன் கல்வி அமைச்சு இணைந்து செயல்பட்டு வருகிறது.
