தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ள சிகரெட் பெட்டிகள் பறிமுதல்; ஆடவரிடம் விசாரணை

1 mins read
1d444f2f-f246-490b-9dd8-b206a15fae8b
வரி செலுத்தப்படாத 53 கள்ள சிகரெட் பெட்டிகளும் 46 சிகரெட் பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டன. - படம்: சாவ்பாவ்

லாவண்டரில் உள்ள பிரஞ்சு ரோட்டில் அக்டோபர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, வரி செலுத்தப்படாத மொத்தம் 53 கள்ள சிகரெட் பெட்டிகளும் 46 சிகரெட் பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் விசாரணையில் உதவி வருவதாக சிங்கப்பூர் சுங்கத் துறை தெரிவித்தது.

அந்தப் பகுதியில் வரி செலுத்தப்படாத சிகரெட் விற்பனை அதிகரித்துவருவதாக சீன நாளிதழான லியான்ஹ சாவ்பாவ் தெரிவித்தது.

அங்கு பெரும்பாலும் ஆறிலிருந்து ஏழு மூத்தோர், வழக்கமான வாடிக்கையாளர்களிடம் சிகரெட் விற்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மூத்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டது.

வரி செலுத்தப்படாத சிகரெட் விலை, சட்டபூர்வமாக விற்கப்படும் சிகரெட் விலையில் கிட்டத்தட்ட பாதி என்று அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர் ஒருவர் கூறினார். சட்டபூர்வமாக விற்கப்படும் சிகரெட் பாக்கெட் ஒன்றின் விலை ஏறக்குறைய $16.

பிப்ரவரி மாதம் அனைத்து புகையிலைப் பொருள்களுக்குமான 15 விழுக்காட்டு வரி அதிகரிப்பு நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் புகைப்பிடிப்பவர்கள் சிகரெட்டுக்குக் கூடுதலாகச் செலவழிக்க வேண்டியுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை சிங்கப்பூர் சுங்கத் துறையின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2021ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4,963ஆக இருந்தது. 2022இல் அது 7,869க்கு உயர்ந்தது. இவ்வாண்டின் முதல் பாதியில் அது 6,300ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்