சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அறிவிக்கப்படாத பணத்தை எடுத்துச் சென்றதற்காகவும் எல்லை தாண்டிய பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பிடிபட்டனர்.
பிப்ரவரி 19ஆம் தேதிக்கும் அம்மாதம் 25ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் காவல்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், சிங்கப்பூர் சுங்கத் துறை, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவை இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன.
அந்நடவடிக்கையின்போது கிட்டத்தட்ட 11,000 பயணிகளையும் 16,000 பைகளையும் கடல், வான், தரைவழிச் சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
37 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு ஆடவர்களையும் 63 வயது மாது ஒருவரையும் அறிவிக்கப்படாத பல்வேறு வெளிநாட்டுப் பணத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்றபோது பிடிபட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச் 1) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
பிடிபட்ட இந்த ஐந்து வெளிநாட்டு பயணிகளில், ஒருவருக்கு எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டதாகவும் மீதமுள்ள நால்வருக்கு மொத்தமாக $21,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.
சிகரெட் அல்லது புகையிலைப் பொருள்கள், மதுபானங்கள் போன்ற பொருள்களுக்குப் பொருள் சேவை வரி செலுத்தத் தவறியதற்காக 53 பயணிகளின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் அதிகாரிகள் கூறினர்.