எதிர்பார்ப்புகள் ஈடேறாவிட்டால் 53% ஊழியர்கள் வேலை மாறத் தயார்: கருத்தாய்வு

2 mins read
f3aa46d5-13e6-4e2c-a2a7-e36ab3a9ee7f
சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரம். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் ஊழியர்களில் 53 விழுக்காட்டினர் தாங்கள் விரும்பிய சம்பள உயர்வோ போனஸ் தொகையோ கிடைக்காவிட்டால் வேலை மாறத் தயாராய் இருப்பதாகக் கருத்தாய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ரேண்ட்ஸ்டாட் சிங்கப்பூர் நிறுவனம் அந்தக் கருத்தாய்வை நடத்தியது. கருத்தாய்வில் பங்கேற்ற 28 விழுக்காட்டினர் மட்டுமே பதவி, சம்பள உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். நிச்சயமற்ற பொருளியல் சூழலில் சம்பள உயர்வு குறித்து ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேண்ட்ஸ்டாட் சிங்கப்பூரின் ‘2026 வேலைச் சந்தை நிலவரம், சம்பள வழிகாட்டி’ (2026 Job Market Outlook and Salary Guide) கருத்தாய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. ஊழியர்களின் வேலை தொடர்பான எதிர்பார்ப்புகளையும் மனப்போக்கையும் அறிந்துகொள்ள சிங்கப்பூரில் வேலை செய்யும் 500 பேரைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது.

கருத்தாய்வில் பங்கேற்றோரில் 64 விழுக்காட்டினர் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். சம்பள உயர்வு இருக்காது என்பது 15 விழுக்காட்டுப் பங்கேற்பாளர்களின் எதிர்பார்ப்பு.

வரும் 2026ஆம் ஆண்டில் நிறுவனங்கள் ஆக அதிகம் பலனளிக்கும் வகையில் செலவு செய்வது, உற்பத்தித்திறன் மற்றும் ஆற்றலை உயர்த்துவது ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தவிருக்கும் வேளையில் ஒவ்வொரு துறையிலும் காணப்படும் தேவைக்கு ஏற்றவாறு சம்பள அளவுகோல் இடம்பெறும் என்றார் ரேண்ட்ஸ்டாட் சிங்கப்பூர் இயக்குநர் டேவிட் பிளாஸ்கோ குறிப்பிட்டார்.

பொறியியல், நிதிச் சேவைகள், உயிர் அறிவியல் ஆகியவற்றில் மீள்திறன் காணப்படுவதாகவும் உயர் பதவிகளுக்கான தேவை இருப்பதாகவும் கருத்தாய்வு தெரிவிக்கிறது. இயந்திர மனிதம் மற்றும் தானியக்கப் பொறியியல் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட துறைகளில் அடங்கும்.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி வேலை இல்லோதோரைவிடக் கூடுதலான வேலை வாய்ப்புகள் இருந்ததாக ரேண்ட்ஸ்டாட் சிங்கப்பூர் தெரிவித்தது.

கிட்டத்தட்ட 64 விழுக்காட்டு ஊழியர்கள் புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுகின்றனர். அதேவேளை, 22 விழுக்காட்டினர் மட்டுமே தொடர்ந்து வேலை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்தாய்வில் பங்கேற்ற 41 விழுக்காட்டினர், புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்தாலும் அவற்றுக்காகத் தீவிரத் தேடலில் ஈடுபடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்