இவ்வாண்டு ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து மே இறுதிவரை வடகிழக்குப் பகுதியில் வசிக்கும் கிட்டத்தட்ட 5,300 பொதுப் போக்குவரத்துப் பயணிகள் உச்சநேரப் பயணங்களைக் குறைந்தது ஒரு முறையாவது தவிர்த்துள்ளனர்.
அவர்களில் ஏறக்குறைய 30 விழுக்காட்டினர் காலை 8.45 மணியிலிருந்து 9.45 மணிவரை உள்ள உச்சநேரத்தில் வடகிழக்கு ரயில் பாதையைப் பயன்படுத்தியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (ஜூலை 2) தெரிவித்தது.
கிட்டத்தட்ட 27 விழுக்காட்டினர் உச்சநேரக் கூட்டத்தைத் தவிர்க்க 7.15 மணிக்கு முன் வடகிழக்கு ரயில்களைப் பயணிகள் தேர்வுசெய்தனர். ஏறக்குறைய 24 விழுக்காட்டினர் உச்சநேரத்துக்கு முன்னும் பின்னும் அவ்வாறு செய்தனர்.
கிட்டத்தட்ட 7 விழுக்காட்டினர் பேருந்துகளில் பயணம் செய்தனர்.
நிலப் போக்குவரத்து ஆணையத் திட்டத்தின்கீழ் உச்சநேரங்களைத் தவிர்க்கும் பயணிகள் போக்குவரத்துக் கட்டணத்தை ஈடுசெய்வதற்கான வெகுமதிப் புள்ளிகளைப் பெறுவர். காலை 7.15 மணியிலிருந்து 8.45 மணி வரை வழக்கமாக உச்சநேரமாகக் கருதப்படுகிறது.
உச்சநேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில் டிரெவல் ஸ்மார்ட் பயணங்கள் (Travel Smart Journeys) திட்டம் தொடங்கப்பட்டது. அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் பயணக் கட்டணத்தில் 80 விழுக்காடு வரை தள்ளுபடி பெறலாம்.
நிலப் போக்குவரத்து ஆணையம் இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து கோவன் ரயில் நிலையத்தையும் திட்டத்தில் இணைத்துக்கொண்டது. பொங்கோல் கோஸ்ட், பொங்கோல், செங்காங், புவாங்கொக், ஹவ்காங் ஆகிய பெருவிரைவு ரயில் நிலையங்களிலும் பொங்கோல், செங்காங் இலகு ரயில் நிலையங்களிலும் திட்டம் செயல்படுகிறது.
திட்டத்தின்கீழ் உள்ள ரயில் நிலையங்களில் காலை 7.15 மணியிலிருந்து 8.45 மணிவரை குறைந்தது ஆறு நாள்களுக்குப் பயணம் செய்வோர் திட்டத்தில் இணையலாம். அவர்கள் உச்சநேரத்தில் பயணம் செய்வோர் என்பதை அது நிரூபிக்கிறது.

