2025ஆம் ஆண்டில் சிங்கப்பூர்வாசிகளில் ஏறத்தாழ 54 விழுக்காட்டினர் அரசாங்க நிதி உதவி பெறும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளில் இடங்களைப் பெற்றுள்ளனர்.
இவர்களில் ஏறத்தாழ 44 விழுக்காட்டினர் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு நேரடியாக முழுநேரப் பட்டப்படிப்புகளில் சேர்ந்த புதிய மாணவர்கள் ஆவர். மீதமுள்ள 10 விழுக்காட்டினர் 21 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள். இவர்கள் பெரும்பாலும் பகுதிநேரப் பட்டப்படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
முன்னர் அறிவிக்கப்பட்ட 60 விழுக்காட்டு ஒதுக்கீட்டுடன் இந்த அண்மைய பங்கேற்பு விகிதம் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது என்றும் பள்ளிக் கல்வியை முடித்த புதிய மாணவர்கள், 21 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பல்கலைக்கழகக் கல்விக்கான வாய்ப்புகள் தொடர்ந்து உறுதிசெய்யப்படுவதைக் கல்வி அமைச்சு எவ்வாறு கண்காணிக்கிறது என்றும் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா எழுத்துபூர்வ வினாவை எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 3) நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக இப்புள்ளிவிவரங்களை வழங்கினார்.
வாழ்நாள் கூட்டுகுழுப் பங்கேற்பு விகிதமான இந்த 54 விழுக்காடு என்பது, ஒரு குறிப்பிட்ட தலைமுறையினர் தங்களது வாழ்நாளில் அரசாங்க நிதி உதவி பெறும் பட்டப்படிப்பு வாய்ப்பைப் பெறுவதைக் குறிக்கும் அளவீடாகும். இதில் தங்களது பிந்தைய வாழ்நாளில் பட்டப்படிப்பைத் தொடருபவர்களும் அடங்குவர்.
தற்போது தேசிய சேவை ஆற்றிவரும் இளைஞர்கள் உட்பட, வரும் ஆண்டுகளில் இத்தலைமுறையைச் சேர்ந்த அதிகமானோர் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரவிருப்பதால், புதிய மாணவர்களுக்கான பங்கேற்பு விகிதம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் லீ தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்குள் இந்த விகிதம் 50 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று 2023ஆம் ஆண்டில் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. இதன்மூலம் 2025ஆம் ஆண்டில் அரசாங்க நிதி உதவி பெறும் பல்கலைக்கழக இடங்களின் எண்ணிக்கை 2,300 வரை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
திட்டமிடப்பட்ட இந்த 60 விழுக்காட்டுக் கொள்ளளவில், புதிய மாணவர்களுக்காக 45 விழுக்காடும், 21 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்காக 15 விழுக்காடும் ஒதுக்கப்பட்டுள்ளது.
